Published : 04 Nov 2017 09:32 AM
Last Updated : 04 Nov 2017 09:32 AM

நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட அனிதா குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் வழங்கினார்

நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

மாணவி அனிதாவின் இல்லத்துக்குச் சென்று அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திருநாவுக்கரசர், பின்னர், அனிதாவின் தந்தை சண்முகத்திடம் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, “ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கும் வகையிலான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்கள் பிரச்சினைக்களுக்காகப் போராடி மக்களுடன் நெருக்கமாகவே உள்ளது.

கமல், ரஜினி, விஜய் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஜனநாயக நாட்டில் அவர்களுக்கு அதற்கான உரிமை உள்ளது. அவர்களது கட்சி கொள்கை மற்றும் கூட்டணி குறித்து அறிவித்த பின்னரே அவர்களைப் பற்றி கருத்து கூறமுடியும்.

ரேஷன் சர்க்கரை விலை உயர்வுக்கு மாநில அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x