Published : 08 Nov 2017 04:09 PM
Last Updated : 08 Nov 2017 04:09 PM

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்: ராமதாஸ்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''உழைப்பவனின் வியர்வை காயும் முன் ஊதியம் வழங்குவது தான் அறம் ஆகும். ஆனால், தமிழகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்தவர்களுக்கு கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஏழை மக்களுக்கு ஊதியம் வழங்கும் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கதாகும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக 100 நாட்கள் வேலை வழங்கப்படும். தமிழ்நாட்டில் இவ்வாறு வழங்கப்பட்ட வேலைக்கான ஊதியத்தை செப்டம்பர் 11-ஆம் தேதிக்குப் பிறகு மத்திய அரசு வழங்கவில்லை. இதே போல் மற்ற மாநிலங்களுக்கும் குறிப்பிட்ட தேதிக்கு மேல் ஊதியம் வழங்கப்படவில்லை. அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி முதல் இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் கடந்த 20-ஆம் தேதி வரை வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ.3066 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்திற்கு வர வேண்டியது ரூ.200 கோடிக்கும் அதிகமாகும்.

தமிழ்நாட்டில் 69.21 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 86.77 லட்சம் பேர் இத்திட்டத்தின் பயனாளிகளாக உள்ளனர். அவர்களுக்கு கடந்த 10 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.3000 முதல் ரூ.7000 வரை ஊதியம் நிலுவை வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கிராமப்புற குடும்பங்களுக்கு இத்தொகை மிக மிக அதிகம் ஆகும். இதனால் ஏழை மக்கள் தங்களின் அன்றாட செலவுகளுக்குக் கூட பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பயனாளிகளுக்கு அடுத்த 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதற்கு வசதியாகவும், ஊதியம் வழங்குவதில் முறைகேடு நடந்து விடக்கூடாது என்பதற்காகவும் தான் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ஊதியம் செலுத்தப்படுகிறது.

ஆனால், பயனாளிகளின் ஊதியக் கணக்குகளை மத்திய அரசுக்கு அனுப்பி, அதற்கான நிதியை பெறுவதில் தான் ஏற்பட்ட குளறுபடிகள்தான் இந்த தாமதத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. பயனாளிகளின் ஊதியத்திற்கான விவரங்களைத் தயாரித்து அதற்கான நிதி மாற்ற ஆணை தயாரிக்கப்பட்டு பொது நிதி மேலாண்மை அமைப்புக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், அவ்வாறு அனுப்பப்பட்டால் ஊதியம் உடனடியாக வழங்கப்பட்டு விடும் என்றும் மத்திய அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால், அனைத்தும் முறையாக செய்யப்பட்டு விட்டதாகவும், அதற்குப் பிறகும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததற்கு காரணம் மத்திய அரசின் அலட்சியம் தான் என்றும் மாநில அரசுகள் தரப்பில் கூறப்படுகிறது. அனைத்து மாநில அரசுகளும் நிதி மாற்ற ஆணையை தயாரித்து அனுப்பாமல், அனுப்பிவிட்டதாக கூறுவதற்கு வாய்ப்பில்லை. அதனால் இத்திட்டத்திற்கான ஊதியம் வழங்கல் அமைப்பில் தான் தவறு இருக்க வேண்டும்.

ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஊதியம் முறையாக வழங்கப்படாததற்கான காரணத்தை கண்டறிவதோ, சரி செய்வதோ மிகவும் சிக்கலான காரியம் அல்ல. ஆனால் அது சரி செய்யப்படாமல், நாடு முழுவதும் 9.20 கோடி தொழிலாளர்களுக்கு கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதற்கு காரணம் சம்பந்தப்பட்ட துறைகளின் அலட்சியம்தான். ஒரு சில அதிகாரிகளின் அலட்சியத்தால் கோடிக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுவதை அரசு அனுமதிக்கக்கூடாது. எனவே, அனைத்து சிக்கல்களையும் சரி செய்து பயனாளிகளுக்கு மத்திய அரசு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.48,000 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டதை விட அதிகம்தான் என்றாலும் போதுமானதல்ல என்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோதே பாமக வலியுறுத்தியது. இப்போது அக்டோபர் மாத முதல் வாரம் வரை இத்திட்டத்திற்காக ரூ.41,760 கோடி, அதாவது 87% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. இப்போது நிலுவையில் உள்ள தொகையும், அக்டோபர் 20-ஆம் தேதிக்குப் பிறகு செய்யப்பட்ட பணிகளுக்கான ஊதியமும் வழங்கப்பட்டால் மீதமுள்ள நிதியும் தீர்ந்து விடும்.

நடப்பு நிதியாண்டு முடிவடைய இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் அதுவரை வேலை வழங்காமல் இருக்க முடியாது. அதுமட்டுமின்றி அனைத்துக் குடும்பங்களுக்கும் சராசரியாக 50% வேலை கூட இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, பயனாளிகளுக்கு போதுமான வேலை வழங்க வசதியாக இத்திட்டத்திற்கு ரூ.10,000 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x