Published : 04 Nov 2017 08:52 AM
Last Updated : 04 Nov 2017 08:52 AM

சென்னையில் தாழ்வான இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது: வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஆய்வு - கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் கே.பழனிசாமி நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மழைக் காலத்தில் தண்ணீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிற தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்படும். ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படும் என்று அப்போது அவர் உறுதியளித்தார். இதற்கிடையில் கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 26-ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை கடந்த 4 நாட்களாக தீவிரமடைந்துள்ளது. கடந்த 31-ம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பரவலாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் மழை, வெள்ளத்துக்கு இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர்.

மெரினாவில் கொட்டித் தீர்த்தது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. சென்னை மெரினாவில் மட்டும் ஒரே நாளில் 30 செமீ மழை கொட்டித்தீர்த்தது. இந்த கனமழையால், சென்னையின் முக்கிய பகுதிகளிலும் சாலைகளிலும் மழைநீர் தேங்கியது. இதனால், நேற்று முன்தினம் இரவு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல, சென்னையின் புறநகர் பகுதிகளிலும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தாம்பரம் அடுத்த முடிச்சூர், குரோம்பேட்டை, சிட்லபாக்கம், கோவிலம்பாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை,வேளச்சேரி, பள்ளிக்கரணை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக தண்ணீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

நேற்று காலை மழை இல்லாததால், பல இடங்களில் தண்ணீர் வடியத் தொடங்கியது. பாதிக்கப்பட்ட பகுதிகள், சுரங்கப்பாதைகளில் இருந்து மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டனர். வீடுகளில் புகுந்த வெள்ள நீரை வெளியேற்றவும், மக்களை நிவாரண முகாம்களுக்கு மாற்றவும் அதிகாரிகளுடன் அமைச்சர்களும் இணைந்து பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமியின் கிரீன்வேஸ் சாலை இல்லத்துக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று காலை வந்தார். அப்போது முதல்வருடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, வடசென்னை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் கே.பழனிசாமி நேற்று பிற்பகலில் பார்வையிட்டார். புது வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை பொன்னியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.

தொடர்ந்து தென் சென்னை, தாம்பரம் அடுத்த முடிச்சூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டார். அங்கும் மக்களிடம் குறைகளைக் கேட்டார். அப்போது அவரிடம், ‘‘தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதும், வீடுகளுக்குள் வெள்ளம் புகுவதும் வாடிக்கையாக இருக்கிறது. இதைத் தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்’’ என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, பள்ளிக்கரணையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், ‘மழையின்போது நீர் தேங்குகிற தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு வடிகால் வசதி ஏற்படுத்தப்படும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. தொடர்ந்து அகற்றப்படும்’ என்றார்.

இந்த ஆய்வின்போது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கன மழை தொடரும்

இந்நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது:

தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், கடலோர மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒருசில இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. அதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஒருசில இடங்களில் கனமழை அல்லது அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில், இடியுடன் மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தை ஒட்டியுள்ள கடற்பகுதியில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். தற்போது உள்ள வானிலை நிலவரப்படி, அடுத்த 2 நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும்.

3-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகம் (மெரினா) பகுதியில் 30 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம்- 20 செமீ, தரமணி- 19 செமீ, நுங்கம்பாக்கம்-18 செமீ, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, சென்னை விமான நிலையம், சீர்காழியில் தலா 18 செமீ, சென்னை அண்ணா பல்கலைக்கழகம்-13 செமீ, தாம்பரம்-12 செமீ, மாமல்லபுரம்-11 செமீ, காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கம், நாகப்பட்டினம் மாவட்டம் ஆனைக்காரன்சத்திரம், திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் தலா 9 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மழை பெய்யும்போது தேவையின்றி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம். தாழ்வான பகுதியில் குடியிருப்போர் நிவாரண முகாம்களுக்கோ அல்லது பாதுகாப்பான இடங்களுக்கோ செல்ல வேண்டும். இடி, மின்னல் ஏற்பட்டால் வெளியே செல்போன் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் என்று வருவாய்த் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x