

விருதுநகர்: தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மிகவும் பின்தங்கிய தொகுதியாக திருச்சுழி உள்ளதாகவும், மத்திய அரசு திட்டங்களால் தற்போது இத்தொகுதி முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.
பாஜக சார்பில் 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று காலை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபயணத்தை தொடங்கினார். அப்போது கூடை பின்னும் தொழிலாளர்கள், இசைக் கலைஞர்களை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக நடைபயணம் மேற்கொண்டார். பெண்கள் பலர் ஆரத்தி எடுத்தும், கட்சியினர் மாலை அணிவித்தும் அவருக்கு வரவேற்பளித்தனர். பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்களையும் பெற்றார்.
காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே அண்ணாமலை என்ற பெயரில் இருந்த ஹோட்டலுக்குள் திடீரென நுழைந்து உரிமையாளரை சந்தித்து பேசியதோடு சற்று நேரம் அமர்ந்து ஓய்வெடுத்தார். தொடர்ந்து நடைபயணத்தை மேற்கொண்டவர், காரியாபட்டி பேருந்து நிலையத்தில் திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மாவட்டம் விருதுநகர். மக்கள் நலனுக்காக போராடி ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் இருந்தார். 12 தடுப்பணை கட்டி உள்ளார். லட்சக்கணக்கான விவசாயிகளை வாழ வைத்தார்.
அதுமட்டுமின்றி ரமணா மகரிஷி பிறந்த சிறப்பு கொண்டதும் பூமி நாதர் கோயிலைக் கொண்டதும் இந்த திருச்சுழி தொகுதி. பூமிநாதர் ஆலயத்தில் விவேகானந்தர் மூன்று நாட்கள் தங்கியதாக வரலாறு கூறுகிறது. இத்தனை சிறப்புகள் இருந்தும் தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய தொகுதியாக திருச்சுழி உள்ளது. நாடு முழுவதும் 27 மாநிலங்களில் 112 பின் தாக்கிய மாவட்டங்களாக மத்திய அரசு கண்டறிந்தது.
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டமும் விருதுநகர் மாவட்டமும் அதில் உள்ளது. 2018-ல் நிதி ஆயோக் மூலம் விருதுநகர் மாவட்டம் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருச்சுழி தொகுதி அடிப்படை வசதிகள் மிகவும் குறைந்த பகுதியாக உள்ளது. அரசியல்வாதிகள் உங்களை பயன்படுத்தி ஓட்டு மட்டும் வாங்கி செல்கிறார்கள். இத்தொகுதி ஒரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இத்தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. இளைஞர்கள் வேலைக்காக வெளியூர்தான் செல்ல வேண்டி உள்ளது.
மத்திய அரசு விருதுநகர் மாவட்டத்தில் கவனத்தை செலுத்திய பிறகு கடந்த 2018-ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிரசவம் என்பது 89 சதவீதமாக இருந்தது. வீடுகளில் நடைபெறும் பிரசவம் 11 சதவிகிதமாக இருந்தது தற்பொழுது அரசு மருத்துவமனையில் பிரசவம் நடைபெறுவது 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் சதவீதம் 55 சதவிகிதத்தில் இருந்து 90 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் எடை குறைவாக உள்ளது 10 சதவிகிதத்தில் இருந்து தற்போது 3.49 சதவீதமாக குறைந்துள்ளது.
பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறை வசதி என்பது 87 சதவிகிதத்தில் இருந்து தற்போது 100 சதவீதத்தை எட்டி உள்ளது. 2,111 நீர்நிலைகள் சீரமைக்கப் பட்டுள்ளன. 2018ல் விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சிமென்ட் வீடுகளின் எண்ணிக்கை 25 சதவீதத்திலிருந்து தற்போது 94 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதோடு பள்ளிக் கல்வித் துறையிலும் அதிக அக்கறை செலுத்தப்பட்டுள்ளது. விருதுநகருக்கும் திருச்சுழி தொகுதிக்கும் மத்திய அரசு நிதி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்கள் மொழி பாடத்தில் பெற்ற சராசரி மதிப்பெண் 58. தற்போது 93. கணிதத்தில் பெற்ற சராசரி மதிப்பெண் 46. தற்போது 76. 2022 டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதும் உள்ள பின் தங்கிய 112 மாவட்டங்களில் முதன்மை மாவட்டமாக விருதுநகர் மாவட்டம் முன்னேற்றப்பட்டுள்ளது.
ஆட்சியாளர்கள் சரியாக இருந்தால் விருதுநகர் மாவட்டமும் திருச்சுழி தொகுதியும் முதன்மை இடத்துக்கு வரும் என்பதற்கு இது சாட்சி. கடந்த 2018 ஆம் ஆண்டு நிதி ஆயோக் மூலம் பிரதமர் விருதுநகர் மாவட்டத்தை முன்னிட்டு பதவிக்கு கொண்டு வந்துள்ளார். திருச்சுழி தொகுதி கொஞ்சமாவது முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு காரணம் பிரதமர் மோடி. தமிழக அமைச்சர்கள் யாரும் காரணம் இல்லை என சவால் விடுகிறேன்.
மத்திய அரசு கொடுக்கும் நிதியை பெற்று மத்திய அரசு செய்யும் வேலைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது தான் திராவிட மாடல் அரசு. கலைஞர் நினைவாக கட்டப்பட்ட நூலகத்திற்கு ரூ.100 கோடி. ஆனால், திருச்சியில் கட்டப்பட்ட கலை அறிவியல் கல்லூரிக்கு கட்டிடம் இல்லாமல் ஒரு பள்ளியில் இயங்கி வருகிறது. தமிழகம் கடன்கார மாநிலமாக மாறிவிட்டது. ரூ.7 லட்சத்து 53 ஆயிரம் கோடி கடன் உள்ளது. ஒவ்வொருவர் தலையிலும் ரூ.3.52 லட்சம் கடன் உள்ளது.
எனவே 2024-இல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் உங்களது வாக்கு பிரதமர் மோடிக்காக இருக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தை தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக எங்களால் கொண்டு வர முடியும்” என்றார். யாத்திரையில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விருதுநகர் பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்ட பாரத மாதா சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையில் கறுப்பு ரிப்பன் கட்டி பாத யாத்திரைகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.