

திருவண்ணாமலை: திருவண்ணாமலை - தாம்பரம் இடையே கடந்த 16 ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ள ரயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக பிரசித்திப் பெற்ற திருத்தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக வீற்றிருக்கிறது. மேலும், கார்த்திகை தீபத் திருவிழாவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் ‘மகா தீபம்’ ஏற்றப்படும். அண்ணாமலையை, ‘மலையே மகேசன்’ என போற்றி பக்தர்கள் வணங்குகின்றனர்.
இம்மலையை, கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமி நாளில் லட்சக் கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அண்ணாமலையாரை நாடி வந்த ரமணர், சேஷாத்திரி, விசிறி சாமியார் உள்ளிட்ட மகான்கள் மற்றும் சித்தர்களின் ஆசிரமங்கள் உள்ளன. அண்ணாமலையார் கோயில் மற்றும் மகான்களின் ஆசிரமங்கள் என கோயில்கள் நிறைந்த திருவண்ணாமலையானது ஆன்மிக பூமியாகும்.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். ‘புனிதம்’ நிறைந்துள்ள திருவண்ணாமலைக்கு, சென்னையில் இருந்து நேரடி ரயில் சேவை இல்லாதது பக்தர்கள், பொது மக்கள், வணிகர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு மிகப்பெரிய குறையாக உள்ளது. இவர்களது குறை கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
விழுப்புரம் - காட்பாடி இடையே இருந்த மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற முடிவானது. இதற்காக, திருவண்ணாமலை - தாம்பரம் இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை கடந்த 2007-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி நிறுத்தப்பட்டன. அகல ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்று, விழுப்புரம் - காட்பாடி இடையே கடந்த 10 ஆண்டுகளாக ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆனால், அகல ரயில் பாதை பணிக்காக நிறுத்தப்பட்ட திருவண்ணாமலை - தாம்பரம் இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படவில்லை. கடந்த 16 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது. இந்திய ரயில்வே அமைச்சகமும் முடக்கிவிட்டது என கூறலாம். திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ரயில் இயக்க பக்தர்கள், பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
பல போராட்டங்களை நடத்தி பொதுமக்களும், சமூக நல அமைப்புகளும் ஓய்ந்து போனது. ரயில்வே அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சருக்கு தமிழக அரசும் கடிதம் எழுதி, அழுத்தம் கொடுத்தது. நாடாளுமன்றத்திலும் குரல் கொடுக்கப்பட்டன. எத்தகைய அழுத்தத்துக்கும் ரயில்வே அமைச்சகம் செவி சாய்க்கவில்லை.
ரயில்வே துறை அமைச்சர்களாக இருந்தவர்கள், தமிழக மக்கள் மற்றும் ஆன்மிக பக்தர்களின் கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. சென்னை கடற்கடையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை இயக்கப்படும் மெமு ரயில் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயிலை திருவண்ணாமலைக்கு தினசரி இயக்க இந்திய ரயில்வே வாரியத்துக்கு தென்னக ரயில்வே கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரிந்துரை செய்தது.
இரண்டரை ஆண்டுகளாகியும் நடைமுறைக்கு வரவில்லை. தென்னக ரயில்வேயின் பரிந்துரையும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை என்பது கடந்த 16 ஆண்டுகளாக கானல் நீராகவே நீடிக்கிறது.
தலைநகருக்கு ரயில் இல்லை...: இது குறித்து பக்தர்கள் கூறும்போது, “சென்னையில் இருந்து வேலூர் அல்லது விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு நேரடியாக ரயில் சேவை அவசியமானது. சென்னை மக்கள் மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் பயன்பெறுவர். ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் இருந்து, தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு ரயில் சேவை இல்லை என்பது வேதனை அளிக்கக்கூடியதாகும்.
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயிலை இயக்குவதில் முனைப்பு காட்டும் மத்திய பாஜக அரசு, பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலைக்கு ரயிலை இயக்காமல் இருப்பது வியப்பாக உள்ளது. ஆன்மிகத்தின் ஆட்சியை நடத்துவதாக கூறுபவர்கள், உலகின் இதய துடிப்பாக இருக்கும், திருவண்ணாமலைக்கு சென்னையில் இருந்து தினசரி ரயிலை இயக்க மறுப்பது ஏனோ?.
புதிதாக ரயிலை இயக்க வேண்டாம். ஏற்கெனவே இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள திருவண்ணாமலை - தாம்பரம் ரயில் சேவையை மீண்டும் தொடங்காமல் இருப்பதற்கு காரணம் என்ன?. பக்தர்களின் நலன் கருதி, தாம்பரம் அல்லது சென்னைக்கு திருவண்ணாமலையில் இருந்து ரயிலை இயக்க, மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
பாஜக அரசு முன்வரவில்லை...: இது குறித்து வணிகர்கள் கூறும்போது, “தாம்பரம் - திருவண்ணாமலை இடையே இயக்கப்பட்டு வந்த ரயில் சேவையை கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு துண்டித்துவிட்டனர். அகல ரயில் பாதைக்காக நிறுத்தப்பட்டது. இப்பணி முடிவுற்றும், மீண்டும் தொடங்கவில்லை. இதற்கான முன்னெடுப்பு பணியை மத்தியில் ஆட்சி நடத்தும் பாஜக அரசும் மேற்கொள்ளவில்லை.
திருவண்ணாமலையில் இருந்து பல்வேறு பணிகளுக்காக சென்னைக்கு வணிகர்கள் தினசரி பயணிக்கின்றனர். இதேபோல் விவசாயிகளும், பொதுமக்களும் செல்கின்றனர். உயர் படிப்புக்காக மாணவர்களும் மற்றும் உடல் நிலை பாதித்தவர்களும் பயணம் செய்கின்றனர். அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கையை ஏற்று திருவண்ணாமலை - சென்னை அல்லது ஏற்கெனவே இயக்கப்பட்ட திருவண்ணாலை - தாம்பரம் (விழுப்புரம் வழியாக) ரயிலை இயக்க வேண்டும்” என்றனர்.