2024-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு இலச்சினை: முதல்வர் ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார்

ஹுண்டாய் மோட்டார் குழும நிறுவனத்தின் செயல் தலைவர் யூசன் சுங் (Euisun Chung) முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில் முதலீடுகள் குறித்துப் பேசினார்.
ஹுண்டாய் மோட்டார் குழும நிறுவனத்தின் செயல் தலைவர் யூசன் சுங் (Euisun Chung) முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில் முதலீடுகள் குறித்துப் பேசினார்.
Updated on
1 min read

சென்னை: சென்னையில் 2024-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஆக.10) வெளியிட உள்ளார்.

தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அபுதாபி, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுக்கும், தொடர்ந்து சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கும் பயணித்து முதலீடுகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.

இதுதவிர, கடந்த 2021 முதல் தற்போது வரை பல்வேறு முதலீட்டாளர்கள் சந்திப்புகள் மூலம் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பாக 2021 மே மாதம் முதல் இதுவரை 3.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன்மூலம் ரூ.2.70 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, அடுத்தாண்டு ஜனவரி மாதம் 10, 11-ம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடுநடத்தப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இதற்கான பணிகளில் தற்போது தொழில்துறை மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் ஆகியவை இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தின் தனிச்சிறப்பு, முதலீட்டுக்கான உகந்த மாநிலம் தமிழகம் என்பதைஎடுத்துக்காட்டும் வகையில், உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கான இலச்சினையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in