

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் கிழக்கு கோபுரத்தில் கொடுங்கை இடிந்து விழுந்ததை, பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேற்று பார்வையிட்டார்.
பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் அதிக வருமானம் வரும் கோயில்களில் ஒன்றான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலையே இவ்வளவு மோசமாக பராமரித்துள்ளார்கள் என்றால், மற்ற கோயில்களின் நிலையைப் பற்றி சொல்லத் தேவையில்லை.
தமிழக அறநிலையத் துறை கோயில் சொத்துகளை சூறையாடுகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிதிலமடைந்த கோயில்களை அறநிலையத் துறை செப்பனிடவில்லை. இந்த கோயிலையும் செப்பனிட அனுமதி வழங்கவில்லை.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு 2 ஆண்டுகளாக அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. அறங்காவலர்கள் இல்லாமல் பூஜை செலவைத் தவிர வேறு எந்த செலவும் செய்ய அதிகாரம் கிடையாது. இந்த அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் சட்டவிரோதமானதாக உள்ளது.
கோயில் வளாகத்தில் தாமரை கோலம் போட அனுமதி மறுத்த ஸ்ரீரங்கம் கோயில் அறநிலையத் துறை பெண் அதிகாரியை பணிநீக்கம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பாஜக போராட்டத்தில் ஈடுபடும்.
பழநி கோயிலுக்கு சொந்தமான ஒருங்கிணைந்த கோசாலை நிலத்தை, சிப்காட் வளாகம் அமைப்பதற்காக அறநிலையத் துறை கொடுக்க முடிவு செய்துள்ளது கண்டனத்துக்குரியது. அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை பொது நலன் என்ற பெயரில் பிற பணிகளுக்கு வழங்கக் கூடாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், அதை மீறி அமைச்சர் சேகர் பாபு செயல்படுகிறார். அவர் அறநிலையத்துறை அமைச்சராக இருக்க தகுதியற்றவர். அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றார்.