

சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்தவர் எம்மா கோன்சல்வெஸ் (80). மனநல மருத்துவரான இவர், திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்தார். இவருக்கு கிரேஸ், பிர்டி என்ற இரண்டு சகோதரிகள். கிரேஸ் ஏற்கெனவே இறந்துவிட்டார். மற்றொரு சகோதரியான பிர்டி, எம்மா வசித்த அதே அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார். கிரேஸின் மகன் இமானுவேல் (46), நீலாங்கரையில் குடும்பத்துடன் வசிக்கிறார். அதே பகுதியில் ரிசார்ட் நடத்தி வருகிறார். இவர்தான் எம்மாவுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து வந்துள்ளார். அதனால், இமானுவேலை தனது மகன்போல எம்மா நடத்தினார்.
கடந்த மாதம் 14-ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த எம்மா மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து எழும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், எம்மாவின் சகோதரி மகனான இமானுவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மாநகர போலீஸ் இணை ஆணையர் சங்கர் கூறியதாவது:
ஜூன் 14-ம் தேதி இரவு எம்மா நீண்ட நேரம் வெளியே வரவில்லை. அவரது சகோதரி பிர்டி வந்து நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. சந்தேகமடைந்த அவர், தன்னிடம் இருந்த மற்றொரு சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்றார். படுக்கையில் எம்மா இறந்து கிடந்தார். அவரது உதட்டில் ரத்தம் வடிந்திருந்தது. அதிர்ச்சியடைந்த பிர்டி, இமானுவேலுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் விரைந்து வந்து, தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.
ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ உதவியாளர், எம்மாவை பரிசோதித்துவிட்டு ‘அவர் இறந்துவிட்டார். இது இயற்கை மரணமாக தெரியவில்லை. உதட்டில் காயம் உள்ளது. எனவே, நாங்கள் உடலை ஆம்புலன்ஸில் ஏற்ற மாட்டோம்’ என்று கூறியிருக்கிறார். அவரிடம் ‘இறப்பு சான்றிதழ் கொடுப்பீர்களா’ என்று இமானுவேல் கேட்டிருக்கிறார்.
மறுநாள் காலை இறுதிச் சடங்குகளுக்கான பணிகளை அவரே செய்திருக்கிறார். உறவினர்கள் சிலர், எம்மாவின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்ப, ஒருவர் போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். போலீஸார் வந்து எம்மாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
எம்மா வசித்த அடுக்குமாடி குடியிருப்பின் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, ஒருவர் எம்மாவின் வீட்டில் இருந்து லேப்-டாப் மற்றும் சில பொருட்களை எடுத்துக் கொண்டு லிப்டில் செல்வது தெரிந்தது. இதையடுத்து, எம்மாவின் வீட்டில் சோதனை செய்தபோது, 2008-ம் ஆண்டு அவர் எழுதி வைத்திருந்த ஒரு உயில் கிடைத்தது. அதில், அவருக்கு சொந்தமான சொத்துக்களை தனித்தனியாக குறிப்பிட்டு, அனைத்தையும் இமானுவேலுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
எம்மா எழுதி வைத்திருந்த உயில் குறித்த தகவல் அவரது சொந்தங்கள் யாருக்கும் தெரியாது. நாங்களும் இதுபற்றி யாருக்கும் தெரிவிக்காமல் இமானுவேலிடம் விசாரணை நடத்தினோம். சந்தேகம் ஏற்படும் வகையில் அவரது பதில்கள் இருந்தன. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், போலியாக தயார் செய்து வைத்திருந்த மற்றொரு உயில் கிடைத்தது. அதில் எம்மா தனது சொத்துக்களை இமானுவேலுக்கு எழுதி வைத்திருப்பதுபோல அவரது கையெழுத்து போலியாக போடப்பட்டிருந்தது. இந்த உயில் 2007-ம் ஆண்டு எழுதப்பட்டதுபோல தயாரிக்கப்பட்டிருந்தது.
இமானுவேலுக்கு பல கோடி ரூபாய் கடன் உள்ளது. எம்மாவின் சொத்துக்கள் ரூ.5 கோடிக்கும் அதிகமாக இருக்கும். எனவே, சொத்துக்காக இமானுவேல்தான் கூலிக்கு ஆள் வைத்து இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம். கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள கொலையாளியை தொடர்ந்து தேடி வருகிறோம்.
இவ்வாறு இணை ஆணையர் சங்கர் கூறினார். கூடுதல் ஆணையர் அபாஸ்குமார், இணை ஆணையர் வரதராஜன், துணை ஆணையர் கிரி ஆகியோர் உடனிருந்தனர்.