Published : 09 Aug 2023 04:05 AM
Last Updated : 09 Aug 2023 04:05 AM

அரூர் அருகே சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு - அதிமுகவினர் முற்றுகையால் பணிகள் நிறுத்தம்

அரூர் அருகே 4 வழிச் சாலையில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரூர்: அரூர் அருகே புதிதாக சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது.

தருமபுரி மாவட்டம் அரூர் வழியாக சேலம் முதல் திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக ரூ.320 கோடி மதிப்பீட்டில் ஊத்தங்கரை முதல் அரூர் அருகேயுள்ள ஏ.பள்ளிப்பட்டி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் முடிந்து பயன்பாட்டில் உள்ளது.

இந்த சாலையில், அரூர் அடுத்துள்ள எருமியாம்பட்டி மற்றும் எச்.புதுப்பட்டிக்கு இடைப்பட்ட பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. சுங்கச்சாவடி அமையும் இடத்தில் சிமென்ட் தரைத்தளம், அலுவலகம் ஆகியவை கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், சுங்கச்சாவடி அமைந்தால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி அதிமுகவினர் நேற்று முற்றுகையிட்டனர்.

முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில், எம்.எல்.ஏ-க்கள் சம்பத் குமார் (அரூர்), கோவிந்த சாமி ( பாப்பி ரெட்டிப்பட்டி ) மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது குறித்து கே.பி.அன்பழகன் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் அனுமதி பெற்று அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையில் அப்போது சுங்கச்சாவடி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தப் பட்டது. தற்போது பணி தொடங்கப் பட்டுள்ளது. சுங்கச் சாவடி அமைந்தால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, சுங்கச்சாவடி அமைக்கக் கூடாது.

மேலும், இப்பகுதியில் உள்ள 18 பேரின் நிலங்கள் எடுக்கப்பட்ட நிலையில் 7 பேர் தங் களுடைய நிலத்தை கொடுக்க மறுத்துவிட்டனர். இருந்த போதிலும் அந்நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. நிலம் கொடுத்தவர்களுக்கும் நில மதிப்பீடு குறைத்து வழங்கப்பட்டுள்ளது. அதனை உயர்த்தி வழங்க வேண்டும், என்றார்.

இதையடுத்து அதிகாரிகள் உத்தரவின்பேரில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டது. பின்னர் அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x