

சென்னை: கனடா நாட்டில் உலக காவல்துறை போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், தமிழக காவல்துறை சார்பில் சென்னை காவல்துறை நவீன கட்டுப்பாட்டறையில் உள்ள காவல் கரங்கள் பிரிவில் தலைமைக் காவலராக பணியில் உள்ள லீலா கலந்து கொண்டார்.
இதில், 7 போட்டிகள் கொண்ட ‘ஹெப்டத்லான்’ பிரிவில் தங்க பதக்கமும், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும், உயரம் தாண்டுதலில் வெண்கல பதக்கமும் என 3 பதக்கங்களை பெற்று காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பதக்கங்கள் வென்ற பெண் தலைமை காவலர் லீலாக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘கனடாவில் நடந்து முடிந்த உலக காவல்துறை மற்றும் தீ விளையாட்டு போட்டியில் (WPFG 2023) கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களைக் குவித்துள்ள தலைமைக் காவலர் லீலாக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்’ என குறிப்பிட்டுள்ளார்.