Published : 09 Aug 2023 06:45 AM
Last Updated : 09 Aug 2023 06:45 AM

அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை: பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை வடக்கு அஞ்சல் கோட்டத்தின் சார்பில், பொதுமக்களுக்கு இல்லம் தோறும் மூவர்ணக் கொடி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அஞ்சல்துறை அனைத்து மகளிர் பேரணி நடைபெற்றது. இதில், பங்கேற்ற தேசிய பெண்கள் கூடைப் பந்து அணியின் முன்னாள் கேப்டன் அனிதா பால்துரை, சென்னை வடக்கு அஞ்சலக கோட்டம் முதுநிலைக் கோட்ட கண்காணிப்பாளர் கி.லட்சுமணன் பிள்ளை உள்ளிட்டோர்.

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடையே தேசியக் கொடி குறித்துவிழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பேரணியும் நடைபெற்றது.

நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மூவர்ண தேசியக் கொடியை வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டு மக்களிடையே தேசபக்தியை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்நிலையில், பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. 20 இன்ச் அகலம், 30 இன்ச் நீளம்கொண்ட தேசியக் கொடியின் விலை ரூ.25 ஆகும்.

சில்லறையாகவும் கிடைக்கும்: பொதுமக்கள், சங்கங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசுமற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தேசியக் கொடியைமொத்தமாகவும், சில்லறையாகவும் அஞ்சலகங்களில் வாங்கிக் கொள்ளலாம். மேலும், www.epostoffice.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆர்டர் செய்தும் பெற்றுக் கொள்ளலாம்.

இதனிடையே, இல்லம்தோறும் மூவர்ணக் கொடி ஏற்றுவது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், சென்னை வடக்கு அஞ்சல் கோட்டம் சார்பில் மகளிர் பேரணிநேற்று நடைபெற்றது. அண்ணாநகர் ரவுண்டானாவில் தொடங்கிய பேரணி, அண்ணாநகர் அஞ்சலகம் வரை சென்றடைந்தது. அங்குதேசிய பெண்கள் கூடைப் பந்துஅணியின் முன்னாள் கேப்டன் அனிதா பால்துரையிடம் மூவர்ணதேசியக் கொடி ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சென்னை வடக்கு முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் கி.லட்சுமணன் பிள்ளை, உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் முத்துக்குமாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x