

சென்னை: என்எல்சி போராட்டம் தொடர்பாகஎன்எல்சி நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை நியமிக்க முடிவு செய்துள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நெய்வேலி என்எல்சியில் ஒப்பந்த தொழிலாளர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி என்எல்சி நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, என்எல்சி கார்ப்பரேட் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்றும், போராட்டம் நடத்துவதற்கான இடத்தை கண்டறிந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி எம்.தண்டபாணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது என்எல்சி தரப்பு வழக்கறிஞர் நித்யானந்தம், தொழிலாளர்கள் தொடர்ந்து நுழைவு வாயில் முன்பாக நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார்.
அரசு சிறப்பு ப்ளீடர் ரவி, ‘‘மாவட்ட எஸ்பி அறிவித்துள்ள இடத்தில் நின்று கொண்டுதான் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.
நுழைவு வாயில் மறிப்பு: அப்போது நீதிமன்றத்தி்ல் ஆஜராகியிருந்த என்எல்சி அதிகாரி ஒருவர், மாவட்ட எஸ்பி போராட்டம் நடைபெற வேண்டிய இடத்தை அறிவித்து விட்டார். ஆனால் தொழிலாளர்கள் நுழைவு வாயிலை மறித்து மற்ற தொழிலாளர்களை வேலைக்கு செல்ல விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் இதில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: அதையடுத்து நீதிபதி, இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காண முடியும் என்பதால் ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்கலாம் என்றார். அதற்கு ஆட்சேபம் தெரிவித்த என்எல்சி தரப்பு, தொழில் தாவா சட்டத்தின்படி இதற்கு தீர்வு காண தனி அதிகாரி உள்ளார் என தெரிவித்தது.
இதில் கோபமடைந்த நீதிபதி,‘‘அந்த தனி அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தி எந்த தீர்வும் கிடைக்கவில்லையே. என்எல்சி நிர்வாகம் பிரச்சினையை விலை கொடுத்து வாங்க விரும்புகிறதா அல்லது அமைதி காண முயற்சிக்கிறதா என கண்டனம் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் இருதரப்பினருடனும் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை நியமிக்கலாம் என முடிவு செய்துள்ளேன்.
எனவே இதுகுறித்து இருதரப்பும் பதிலளிக்க வேண்டும். அதேபோல போராட்டம் நடத்துவதற்கான இடம் குறித்து மாவட்ட எஸ்பி அடுத்த விசாரணையின்போது அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி நேரில் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தி இந்த வழக்கை வரும் ஆக.11-க்கு தள்ளிவைத்தார்.