Published : 09 Aug 2023 06:02 AM
Last Updated : 09 Aug 2023 06:02 AM

பல்லாவரத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றம்

பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை பகுதியில் இங்கிலீஷ் எலக்ட்ரிக் நகர் பகுதியில் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி. நேற்று நடைபெற்றது. படம்: எம்.முத்துகணேஷ்

பல்லாவரம்: தாம்பரம் மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள, கீழ்க்கட்டளை ஏரிக்குச் செல்லும் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றப்பட்டன.

தாம்பரம் மாநகராட்சி, 21-வதுவார்டு, ஜமீன் பல்லாவரம், இங்கிலீஷ் எலக்ட்ரிக் நகரில், சாலை, கால்வாய், தெரு விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை குழாய் போன்ற அடிப்படை வசதிகளே இல்லை.

குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்: இந்த நகர் வழியாக கீழ்க்கட்டளை ஏரிக்கு செல்லும் மழைநீர் கால்வாயை, பலர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளனர். இதனால், வேல்ஸ் சிக்னல் அருகேஉள்ள பொத்தேரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், கீழ்க்கட்டளை ஏரிக்கு செல்ல வழியின்றி, இங்கிலீஷ் எலக்ட்ரிக் நகரில், குடியிருப்புகளை சுற்றி தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் கால்வாயை மீட்டு, கழிவுநீர் கலந்த தண்ணீர் குடியிருப்புகளில் தேங்காமல், கீழ்க்கட்டளை ஏரிக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, மே மாதம், 20 அடி துாரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது, தாங்களே இடித்து கொள்வதாக ஆக்கிரமிப்பாளர்கள் கூறியதை அடுத்து, கால அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனால், கூறியபடி இடிக்காததால், நேற்று முன்தினம் வருவாய்த் துறையினர் அளவீடு செய்து, பல்லாவரம் வட்டாட்சியர் ஆறுமுகம் தலைமையில் ஆக்கிரமிப்புகளைஇடிக்கும் பணி நேற்று தொடங்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x