Published : 09 Aug 2023 08:15 AM
Last Updated : 09 Aug 2023 08:15 AM
தாம்பரம்: தாம்பரத்தில் காலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்குச் செல்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். வெளியூர் பேருந்துகள் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகிறார்கள். இவர்களை ஒழுங்குபடுத்த போக்குவரத்து காவலர்கள் பணியில்இருப்பதில்லை. இதனால் ஷேர் ஆட்டோக்களும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
எனவே அதிகமான எண்ணிக்கையில் போக்குவரத்து காவலர்களை பணியில் ஈடுபடுத்தி தாம்பரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் எனதாம்பரத்தை சேர்ந்த வாசகர் தனவந்தன் இந்து தமிழ்திசை நாளிதழின் உங்கள் குரல் வாயிலாக புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து போலீஸார் கூறியது: தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாய் இருப்பது அரசு பேருந்துகள் தான். இவர்களிடம் பலமுறை சொன்னாலும் அவர்கள் காது கொடுத்து கேட்பதில்லை இல்லை. தட்டி கேட்டால் வாக்குவாதம் செய்து வீண் சண்டைக்கு வழிவகுக்கிறது.
இதுகுறித்து அரசு போக்குவரத் துறை அதிகாரிகளிடம் புகார் செய்து விட்டோம். ஆனாலும், நடவடிக்கைதான் இல்லை. மேலும் பொதுமக்களும் எங்களுக்கு முறையாக ஒத்துழைப்பு தருவதில்லை. பேருந்து நிலையத்துக்கு வந்து நிற்பதற்குள் இறங்கி விடுகின்றனர். இதனால் பேருந்து ஓட்டுநர்கள் விபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விடுகின்றனர்.
மேலும் போக்குவரத்தை ஒழுங்கு செய்வதற்கு போதிய காவலர்கள் எங்களிடம் இல்லை. கூடுதலாக காவலர்களை கொடுத்தால் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முடியும். பேருந்து நிலையம் தாம்பரத்தில் இல்லாததால் சாலை ஓரங்களில் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. மேம்பாலத்தை மாற்றி அமைத்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். கூடுதல் காவலர்களை நியமிப்பதும் மேம்பாலத்தை மாற்றி அமைப்பதும் அரசுதான் முடிவுசெய்ய வேண்டும். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT