

புதுச்சேரி சட்டப்பேரவை தொடங்கியவுடன் எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் அரசு மீது குற்றம் சாட்டி ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தன.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மே மாதம் 16-ம் தேதி தொடங்கி, ஜூன் 16-ம் தேதிவரை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை சட்டப்பேரவை கூட்டப்படும் என்ற விதிப்படி குளிர்கால கூட்டத்தொடர் இன்று (வியாழக்கிழமை) கூடியது.
நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் காரணமாக வழக்கத்தை விட கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசானா ஆகியோர் கையில் பிளாஸ்டிக் தட்டுகளில் அரசு தராமல் உள்ள இலவச அரிசி, சர்க்கரை, இலவச துணி வைத்து எடுத்து வந்தனர்.
அதன்படி இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள ஜல்லிக்கட்டு தொடர்பான சட்ட மசோதாவும், நீதிமன்ற கட்டணங்களை மின்னணு முறையில் செலுத்துதல் தொடர்பான மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் தாங்கள் கொண்டு வந்த "பிளாஸ்டிக் டிரே"-வை சபாநாயகரிடம் தரக்கூறி விட்டு வெளிநடப்பு செய்தனர்.
அதிமுக அன்பழகன் கூறுகையில், "அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூட்டவில்லை. இலவச அரிசி, சர்க்கரை, ஆதிதிராவிடர்களுக்கு இலவச துணி தரவில்லை. அதனால்
அரசுக்கு நினைவூட்டும் வகையில் அரசுக்கு வழங்கி விட்டு வெளிநடப்பு செய்கிறோம்" என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, முதல்வர் அறிக்கை வாசிக்கும்போது தொடர்ந்து பேசினார், " இலவச அரிசி போடவில்லை. வெள்ளை அறிக்கை
வெளியிடுங்கள். எத்திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அரசு என்ன செய்கிறது. ஆளுநர்- முதல்வர் மோதல்தான் இருக்கிறது. மக்கள் பிரச்சினை கவனம்
செலுத்தப்படுவதில்லை" என்று குற்றம் சாட்டினார்.
அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேரும் ரங்கசாமி தலைமையில் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.