

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஐப்பசி மாதத்தின் இறுதிநாளான நேற்று காவிரி ஆற்றில் உள்ள துலாக் கட்டத்தில் கடைமுழுக்கு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஐப்பசி மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட புண்ணிய நதிகள் தங்கள் பாவத்தைப் போக்கிக்கொள்ள மயிலாடுதுறை காவிரியில் உள்ள துலாக் கட்டத்தில் நீராடுவதாக ஐதீகம். அதன்படி, ஐப்பசி மாத முதல்நாளான அக்.18-ம் தேதி இந்த ஆண்டுக்கான முதல் தீர்த்தவாரி தொடங்கியது. தொடர்ந்து துலாக் கட்டத்தில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
இந்நிலையில், மயூரநாதர் கோயிலில் கடந்த 7-ம் தேதி 10 நாள் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. துலா உற்சவத்தின் 7-ம் நாளன்று திருக்கல்யாணம், 9-ம் நாளன்று தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, துலா உற்சவத்தின் நிறைவாக ஐப்பசி 30-ம் தேதியான நேற்று கடைமுழுக்கு உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி, அபயாம்பிகை சமேத மயூரநாதர் சர்வ அலங்காரத்துடன் கோயிலில் இருந்து புறப்பட்டு காவிரிக்கரை துலாக் கட்டத்துக்கு வந்து சேர்ந்தார். அதனைத்தொடர்ந்து, அறம் வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர், காசி விசாலாட்சி சமேத படித்துறை விஸ்வநாதர், ஞானாம்பிகை சமேத வதாராண்யேஸ்வரர் ஆகிய சுவாமிகளுடன் பஞ்சமூர்த்திகளும் சர்வ அலங்காரத்துடன் வீதியுலாவாக துலாக் கட்டத்துக்கு வந்தனர்.
இருகரைகளிலும் சுவாமிகள் வீற்றிருக்க அவர்களுக்குரிய அஸ்திரதேவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து புனித நீராட்டல் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் காவிரியில் புனித நீராடினர்.
காவிரியில் தண்ணீர் வராத நிலையில் மகா புஷ்கரம் விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது. பக்தர்கள் அதில் புனித நீராடினர். அதனைத் அனைத்து தெய்வங்களுக்கும் தீபாராதனை நடைபெற்றது.
இதில், திருவாவடுதுறை குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார், புஷ்கரம் விழாக்குழு உறுப்பினர்கள் ஜெகவீரபாண்டியன், அப்பர் சுந்தரம், முத்துக்குமரசாமி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.