Published : 30 Nov 2017 06:17 PM
Last Updated : 30 Nov 2017 06:17 PM

அன்புச்செழியன் அலுவலகத்தில் போலீஸ் ரெய்டு: ஹார்ட் டிஸ்க், டைரிகளை எடுத்துச்சென்றனர்

தலைமறைவாக இருக்கும் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் அலுவலகத்தில் நீதிமன்ற உத்தரவுடன் போலீஸார் சோதனை நடத்தி, ஹார்ட் டிஸ்க் மற்றும் டைரிகளை கைப்பற்றி எடுத்துச்சென்றனர்.

பிரபல நடிகரும், இயக்குநருமான சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் (43). இவர் இணை தயாரிப்பாளர் மற்றும் சசிகுமாரின் படத் தயாரிப்பு நிறுவன அலுவலக நிர்வாகியாகப் பணியாற்றி வந்தார். கடந்த 21-ம் தேதி வளசரவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பைனான்சியர் ஜி.என்.அன்புச்செழியனிடம் கடன் வாங்கியது தான் நாங்கள் செய்த பெரிய பாவம். வட்டி, வட்டிக்கு மேல் வட்டி என்று கடந்த 7 ஆண்டுகள் வாங்கியவர் கடந்த 6 மாதமாக மிகவும் கீழ்த்தரமாக நடத்த ஆரம்பித்தார்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, தற்கொலைக்கு தூண்டியதாக அன்புச்செழியன் மீது வளசரவாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தற்போதுவரை அன்புச்செழியன் தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படை அமைத்து போலீஸார் தேடிவருகின்றனர்.

இந்நிலையில் அன்புச்செழியனின் அலுவலக நிர்வாகிகள் சாதிக்பாட்சா, முருகன் குமார் இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனுவையும் வாபஸ் பெற்ற அன்புச்செழியன் சரணடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வளசரவாக்கம் போலீஸார் இன்று திடீரென அன்புச்செழியனின் அலுவலகத்துக்கு வந்தனர். வடபழனி உதவி ஆணையர் மற்றும் வளசரவாக்கம் ஆய்வாளர் தலைமையில் வந்த போலீஸார் தி.நகர் ராகவய்யா சாலையில் இருக்கும் கோபுரம் பிலிம்ஸ் மற்றும் அன்புச்செழியனின் பைனான்ஸ் அலுவலகத்தில் சோதனையிட்டனர்.

சோதனையின் போது அன்புச்செழியனின் அலுவலக ஊழியர்கள் இரண்டுபேர் உடனிருந்தனர். நீதிமன்ற அனுமதியுடன் நடந்த சோதனையை வீடியோகாட்சிகளாக போலீஸார் பதிவு செய்தனர். பின்னர் அவரது அலுவலகத்திலிருந்து ஹார்ட் டிஸ்க் ஒன்றும், சில டைரிகளையும் போலீஸார் எடுத்துச்சென்றனர். இந்த சோதனை அரைமணி நேரம் நீடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x