

புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அங்குள்ள அன்னை, அரவிந்தர் சமாதிகளில் மலர் வைத்து வழிபட்டார். அவர்களின் அறைகளை சுற்றிப் பார்த்தார்.
புதுச்சேரிக்கு 2 நாள் அரசு முறை பயணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று வந்தார். 2-வது நாளான இன்று காலை நீதிபதிகள் விருந்தினர் மாளிகையில் அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களை சந்தித்தார். அவரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். பின்னர் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்றார். ஆசிரம நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். தொடர்ந்து மகான் அரவிந்தர், அன்னையின் சமாதியில் மலர்களை வைத்து வழிபட்டார். பின்னர் அரவிந்தர், அன்னை ஆகியோர் பயன்படுத்திய அறைகளை பார்வையிட்டார்.
பின்னர் அரவிந்தர் ஆசிரம நுாலகத்துக்கு சென்று பார்வையிட்டார். அரவிந்தர், அன்னையின் வரலாறை ஆசிரம நிர்வாகிகள் எடுத்துக் கூறினார். சுமார் ஒரு மணி நேரம் அரவிந்தர் ஆசிரமத்தில் இருப்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அரைமணி நேரம் மட்டுமே அங்கிருந்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஆரோவில்லுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு மாத்திரி மந்திரை பார்வைவிட்டு சுற்றிப் பார்க்கிறார். மதிய உணவு சாப்பிட்டு விட்டு ஆரோவில் நகர் கண்காட்சி அரங்கத்தை பார்வையிடுகிறார். அவருக்கு ஆரோவில் சர்வதேச உருவான விதம் குறித்த வீடியோ காட்சி காட்டப்படும். அதைத் தொடர்ந்து ஆரோவில் கருத்தரங்கு அறையில் அரவிந்தரின் 150-வது ஆண்டு விழா கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசி கலை நிகழ்வுகள் பார்க்கிறார். இதன்பின் அங்கிருந்து லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு வந்து மாலையில் ஹெலிகாப்டரில் சென்னை புறப்படுகிறார்.