திருக்கழுகுன்றம் சந்நிதி தெருவில் ஆக்கிரமிப்பு கடைகளால் அவதி

ஆக்கிரமிப்புக்கு உள்ளான சந்நிதி தெரு
ஆக்கிரமிப்புக்கு உள்ளான சந்நிதி தெரு
Updated on
1 min read

திருக்கழுக்குன்றம்: திருக்கழுகுன்றத்தில் வேதகிரீஸ்வரர் சந்நிதி தெருவில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்து தமிழ் திசையின் உங்கள் குரல் பகுதியை தொடர்பு கொண்டு பெயர் கூற விரும்பாத வாசகர் ஒருவர் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் நகரின் நடுவே பிரசித்திபெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் தாழக்கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில், தாழக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரத்தை ஒட்டி செங்கல்பட்டு- கல்பாக்கம் செல்லும் பிரதான சாலையுடன், சந்நிதி தெரு இணைவதால் பக்தர்கள் மேற்கண்ட பிரதான சாலையை கடந்துதான் கோயிலுக்கு செல்லும் நிலை உள்ளது.

இந்நிலையில், சந்நிதி தெருவில் 15 அடிவரை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தெருவில் அரசு மருத்துவமனை, சங்கு தீர்த்த குளம், அஞ்சலகம் உள்ளிட்டவைகள் அமைந்துள்ளதால் வாகனம் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. ஆனால், இத்தெருவில் கடைகள் அமைத்துள்ள நபர்கள் வியாபார போட்டியினால், சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர். இதனால், செங்கல்பட்டு- கல்பாக்கம் செல்லும் பிரதான சாலையுடன் சந்நிதி தெரு இணையும் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடந்து செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களும் சாலையை கடந்து செல்ல முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். அதனால், சந்நிதி தெருவில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இதுகுறித்து, திருக்கழுகுன்றம் பேரூராட்சி அதிகாரிகள் கூறும்போது, சந்நிதி தெருவில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in