

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் ஒருபோதும் அடைக்கலம் புகமாட்டேன் என்று, அமமுக பொதுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அமமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 6-ம்தேதி நடந்தது. 2,360 பொதுக்குழு உறுப்பினர்கள், 1,000-க்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட 3,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில், டிடிவி தினகரன் பேசியபோது, ‘‘தனித்து தேர்தலை சந்திக்க திமுக, அதிமுககூட அஞ்சும் நிலையில், நமக்கு மட்டுமே அந்த தைரியம் உள்ளது. பழனிசாமியிடம் ஒருபோதும் அடைக்கலம் புகமாட்டேன், அவரது துரோகத்தை மன்னிக்க மாட்டேன். அவர்களை வீழ்த்தாமல் ஓயமாட்டேன்’’ என்றார்.
அவருக்கு நினைவுப் பரிசாக செங்கோல், வெள்ளி வாள் வழங்கப்பட்டது. பொதுக்குழு கூட்டத்துக்கு துணை பொதுச் செயலாளர் சண்முகவேல் தலைமை வகித்தார். துணை பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன், ரங்கசாமி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற மாவட்டச் செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இதற்கிடையே, பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி, கட்சியின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன், தலைவராக முன்னாள் எம்.பி.யான சி.கோபால், துணை தலைவராக எஸ்.அன்பழகன் ஆகியோரை ஒரு மனதாக தேர்வு செய்துள்ளதாக தேர்தல் பிரிவு செயலாளர்கள் அறிவித்தனர். அமமுகஉருவாக்கப்பட்டதில் இருந்து காலியாக இருந்த தலைவர் பதவிக்கு சி.கோபால் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தீர்மானங்கள் நிறைவேற்றம்: கட்சியில் மாவட்டங்கள் மறு சீரமைப்பு, சார்பு அணியில் புதிய மண்டலங்கள் உருவாக்கம் போன்றவற்றுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. பரந்தூர் விமான நிலையம், என்எல்சி விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என்பது உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.