

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.கார்த்திக் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
“சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளச் சென்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரும், மூத்த வழக்கறிஞர்கள் இரண்டு பேரும் விழா அரங்கினுள் செல்ல இயலாதவறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வேட்டி அணிந்து சென்றதாலேயே விழா அரங்கினுள் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் இயங்கும் கிளப்களை ஒழுங்குபடுத்தும் வகையில் நடவடிக்கைகளை எடுக்கும்படி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
மேலும், வேட்டி அணிய அனுமதி மறுக்கும் கிளப்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு, அந்த கிளப் களுக்கு வழங்கப்பட்ட லைசென்ஸ்களை ரத்து செய்யும்படி மாநில உள் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கார்த்திக் தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை வேறு நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.