மத்திய அமைச்சர் வருகை தள்ளிவைப்பால் அண்ணாமலை நடைபயணத்தில் மாற்றம்

மத்திய அமைச்சர் வருகை தள்ளிவைப்பால் அண்ணாமலை நடைபயணத்தில் மாற்றம்
Updated on
1 min read

சென்னை: மத்திய அமைச்சர் வருகைக்காக அண்ணாமலை நடைபயணத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

ஊழலுக்கு எதிராகவும், மத்திய பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். ராமேசுவரத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி நடைபயணம் தொடங்கியது.

இந்நிலையில், அண்ணாமலை நடைபயணத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஆக. 8-ம் தேதி திருப்பரங்குன்றம், திருமங்கலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைபயணத்தை, ஆக. 6-ம் தேதியே முடிக்கப்பட்டது. ஆக. 7-ம் தேதி மத்திய அமைச்சருடன் திட்டமிட்டிருந்த அண்ணாமலையின் நடைபயணம் நேற்று நடைபெறவில்லை. அதேபோல, இன்றும் (ஆக. 8) நடைபயணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ளதால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நடைபயணத்தில் குறித்த நேரத்தில் பங்கு பெறவில்லை என்றும், அவர் தேதி ஒதுக்கிய பிறகு மதுரையில் மத்திய அமைச்சருடன் நடைபயணம் நடைபெறும் என்றும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நடைபயண இணைப் பொறுப்பாளர் அமர்பிரசாத் ரெட்டி கூறும்போது, “எங்களுக்கும் ஓய்வு தேவைப்படுகிறது. அதனால் கூடுதலாக ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கொண்டோம். ஆக. 9-ம் தேதி திருச்சுழியில் நடைபயணம் தொடங்கும். தொடர்ந்து, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்தூர், கோவில்பட்டி என அண்ணாமலையின் நடைபயணம் தொடரும்.

மதுரையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும், சங்கரன்கோவிலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், திருநெல்வேலியில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவும் அண்ணாமலையின் நடைபயணத்தில் பங்கேற்கின்றனர். மதுரையில் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு அண்ணாமலையுடன் அமைச்சர் மான்சுக் மாண்டவியா நடைபயணத்தில் பங்கேற்பார். அப்போது, மக்களிடம் அமைச்சர் உரையாற்றுவார்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in