காடையாம்பட்டி அருகே குடிநீர் தட்டுப்பாடு - காலிக்குடங்களுடன் வந்த பெண்கள்

காடையாம்பட்டியை அடுத்த நடுப்பட்டி ஊராட்சி தளவாய்ப்பட்டி பகுதி மக்கள், குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி, காலிக்குடங்களுடன் சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். 		             			  படம்: எஸ்.குரு பிரசாத்
காடையாம்பட்டியை அடுத்த நடுப்பட்டி ஊராட்சி தளவாய்ப்பட்டி பகுதி மக்கள், குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி, காலிக்குடங்களுடன் சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். படம்: எஸ்.குரு பிரசாத்
Updated on
1 min read

சேலம்: ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி அருகே தளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கக் கோரி சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

காடையாம்பட்டியை அடுத்த நடுப்பட்டி ஊராட்சி தளவாய்ப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர், தங்கள் பகுதிக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்வதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வந்து, மனு அளித்தனர்.

பின்னர் அவர்கள் மேலும் கூறியது: தளவாய்ப்பட்டியில், 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு குடிநீர் ஆதாரம் இல்லாததால், ஊராட்சி சார்பில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது, 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இது குறித்து வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர் ஆகியோரிடம் கேட்டால் முறையான பதில் இல்லை. பலமுறை முறையிட்டும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

வேலைக்கு செல்ல முடியவில்லை: எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு உள்பட நீர் நிலைகள் ஏதும் இல்லை. இதனால், குடிநீருக்காக தினமும் பல கிமீ., தூரம் சென்று வர வேண்டியுள்ளது. மக்களில் பலர் தினசரி கூலி வேலைக்கு சென்று வரும் நிலையில், குடிநீருக்காக நீண்ட தூரம் சென்று வர வேண்டியிருப்பதால், வேலைக்கு செல்வது பாதிக்கப்படுகிறது.

குழந்தைகளை பள்ளிக்கு சரியான நேரத்தில் அனுப்ப முடியாமல், தினமும் அவதிப்படுகிறோம். எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் சிக்கலை தீர்ப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in