Published : 08 Aug 2023 06:05 AM
Last Updated : 08 Aug 2023 06:05 AM
சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து எழும்பூர் நிலையத்துக்கு செல்ல, பிஹார் தொழிலாளர்கள் 19 பேரை ஆட்டோக்களில் ஏற்றி, உத்தண்டிக்கு அழைத்துச் சென்று, ஒவ்வோருவரிடமும் தலா ரூ.1,000 வசூலித்த 6 ஆட்டோ ஓட்டுநர்கள் போலீஸாரிடம் பிடிபட்டனர்.
பிஹார் மாநிலத்திலிருந்து கடந்த 4-ம் தேதி குவஹாட்டி விரைவு ரயிலில் 19 தொழிலாளர்கள் புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்தனர். இவர்கள் புதுச்சேரியில் உள்ள சவானி ஹரிடேஜ் கன்சர்வேஷன் என்ற தனியார் நிறுவனத்தில் கட்டிட வேலைக்காக வந்திருந்தனர்.
இவர்கள் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து காலை 6.25 மணிக்குப் புறப்படும் விரைவு ரயிலில் புதுச்சேரிக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி, சென்னை சென்ட்ரலில் வால்டாக்ஸ் சாலை அருகே நின்ற ஆட்டோ ஓட்டுநர்களிடம் எழும்பூர் செல்ல வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
எழும்பூர் அழைத்துச் செல்வதாகக் கூறி, அவர்களை 6 ஆட்டோக்களில் ஏற்றி, எழும்பூர் வெகு தொலைவில் இருப்பது போன்று காட்டுவதற்காக ஈசிஆர் உத்தண்டி அருகே அழைத்துச் சென்றனர். நள்ளிரவு நேரத்தில் யாரும் இல்லாத இடத்தில் இறக்கிவிட்டு, ஒரு நபருக்கு தலா ரூ.1,000 தர வேண்டும் எனக் கேட்டனர்.
இந்த தொகை அதிகம் என்று கூறியசில தொழிலாளர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர், அவர்களிடம் வலுக்கட்டாயமாகப் பணத்தை வசூலித்தனர். இதையடுத்து, அந்த தொழிலாளர்களில் ஒருவர், காவல் உதவி எண் 100-க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில், கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கோபி தலைமையிலான தனிப்படை போலீஸார், உத்தண்டி சென்று 6 ஆட்டோ ஓட்டுநர்களைச் சுற்றி வளைத்தனர். அவர்களின் ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனர். அந்த தொழிலாளர்களை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பூக்கடை போலீஸார் வழக்குப்பதிந்து, வியாசர்பாடியைச் சேர்ந்த குமரேசன்(29), மதன்ராஜ்(30), மணி(30), சவுகார்பேட்டையைச் சேர்ந்த ரஞ்சித்குமார்(24), மணலி புதுநகரைச் சேர்ந்த ஜெகநாத்(40), புளியந்தோப்பை சேர்ந்த சுரேஷ் குமார்(32)ஆகிய 6 பேரைப் பிடித்து விசாரணைநடத்தினர். பிறகு, அவர்களை எச்சரித்து போலீஸார் அனுப்பி வைத்தனர். ஆனால், கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை ஆட்டோ ஓட்டுநர்களிடமிருந்து பெற்று தொழிலாளர்களிடம் மீண்டும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்: சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களை ஒட்டிய இடங்களில் அனுமதி இல்லாத ஆட்டோக்களை நிறுத்தி, ரயில்களிலிருந்து இறங்கி வரும்ஊர் மற்றும் மொழி தெரியாத வெளி மாநில தொழிலாளர்களிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் பேச்சுக் கொடுக்கின்றனர். அவர்கள் கூறும் இடத்தில் இறக்கிவிட எவ்வளவு தொகை தரவேண்டும் என ஆரம்பத்தில் பேசுகின்றனர். ஆனால், அதைவிட அதிகப் பணம் வசூலித்து வருகின்றனர்.
புதிய இடம் என்பதால், வெளி மாநில தொழிலாளர்கள் வேறு வழியின்றி கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு செல்லும் நிலை இருக்கிறது. ஆட்டோ ஓட்டுநர்கள் தலா ரூ.2,000 வரை அதிகப் பணம் வசூலில் வருவது தொடர் கதையாகி வருகிறது. சென்னை நகருக்கே அவப்பெயரை ஏற்படுத்தும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT