Published : 08 Aug 2023 07:00 AM
Last Updated : 08 Aug 2023 07:00 AM

பள்ளி மாணவர்களுக்கு காலணி, சீருடையை உடனடியாக வழங்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: பள்ளிகள் திறந்து ஒரு மாதம் கடந்த நிலையில், மாணவர்களுக்கு புத்தகப் பை, காலணி மற்றும் சீருடைகளை இன்னும் முழுமையாக வழங்காததால், மாணவ, மாணவிகள் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், சில பள்ளிகளில் வழங்கப்பட்ட காலணிகள், மாணவர்களுக்கு பொருந்தும் அளவில் இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.பள்ளி மாணவர்களுக்கான உபகரணங்களை குறித்த நேரத்தில் வழங்குவதை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஏன் உறுதி செய்யவில்லை?

கடந்த ஆண்டும் இதேபோல காலதாமதமாக வழங்கப்பட்டதால், அவற்றை மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஆண்டாவது, பாடநூல் கழகமும், பள்ளிக்கல்வித் துறையும் மீண்டும் அதே குற்றச்சாட்டு எழாமல் தவிர்த்திருக்க வேண்டும்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நூறாவது பிறந்த நாளைக்கொண்டாட, அமைச்சர்கள் தலைமையில் 12 கமிட்டி அமைத்து, ஒவ்வொரு கமிட்டிக்கும் ரூ.3 முதல் ரூ.4 கோடிசெலவிடப்படுவதாக தெரிய வந்துள்ளது.

பெருமளவு நிதி இதற்கு ஒதுக்கப்படுவதால், மாணவர்களுக்கு வழங்கவேண்டிய உபகரணங்களை வழங்காமல் தமிழக அரசு அலைக்கழிக்கிறதா? திமுக ஆட்சிக்கு வந்ததும்,பத்தாயிரம் சிதிலமடைந்த அரசு பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதியகட்டிடங்கள் கட்டப்படும் என்று அறிவித்தார்கள். இதுவரை எத்தனை பள்ளிக்கட்டிடங்களைக் கட்டியுள்ளார்கள்?கோடிக்கணக்கில் வீணாக செலவு செய்யும் திமுக அரசுக்கு, நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவர்கள் நலனுக்கு நிதி ஒதுக்க மனமில்லை.

மாணவர்களைக் காக்க வைப்பதை அனுமதிக்க முடியாது. உடனடியாக, தமிழகம் முழுவதும் மாணவ,மாணவிகளுக்கு சீருடை, காலணிகள்உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x