

சென்னை: எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், ‘உணவு, ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்துக்கான வலிமைமிக்க சிறுதானியங்கள்’ என்ற தலைப்பில் 3 நாள் சர்வதேச மாநாடு சென்னை தரமணியில் உள்ள அறக்கட்டளை வளாகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
2-ம் நாள் நிகழ்வில் காணொலிகாட்சி வாயிலாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி பங்கேற்று பேசியதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கு சிறு தானியங்கள் அவசியம் என்பதை எங்கள் அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மக்கள் தேவைக்கு ஏற்ப சிறு தானியங்களை கொள்முதல் செய்வது மிகப்பெரிய சவாலாகும். அதனால் மாநில அரசுகள்தேவைக்கு ஏற்ப சிறு தானியஉற்பத்தியை அதிகரிக்க வேண்டும். சிறு தானியங்கள் உற்பத்தி, பயன்பாட்டை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.
பேராசிரியர் சி.கோபாலன் நினைவு சொற்பொழிவில் பேசிய மத்திய அரசின் நிதி ஆயோக் உறுப்பினர் வினோத் குமார் பால், ``பணக்காரர்களாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி,இந்தியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போதுமான சத்துணவை ஊட்டுவதில்லை'' என்று தெரிவித்துள்ளார். ஐநாவின் உலக உணவுத் திட்டத்தின் இந்திய இயக்குநர் எலிசபெத் ஃபாரே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.