

தென்காசி: தென்காசி மாவட்டம், கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வெங்காடம்பட்டி ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் ஜனதா தலைமையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
ஊராட்சி உறுப்பினர் ஜனதா கூறும்போது, “வெங்காடம்பட்டி ஊராட்சி லெட்சுமியூரில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் வழங்க 15-வது நிதிக் குழு மானிய திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பணி முடிந்த நிலையில், ஊராட்சி தலைவர் ஸாருகலா தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு குடிநீர் வழங்க விடாமல் செய்கிறார்.
இது குறித்து பல முறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி தலைவரின் தந்தை தூண்டுதலால் இவ்வாறு செய்கிறார். ஊராட்சித் தலைவரின் தந்தை நிர்வாகத்தில் தலையிடுகிறார். இதைத் தடுக்க வேண்டும்” என்றார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுலவர் திருமலை முருகன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா கூறும்போது, “வீட்டு குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பித்து, டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க மறுக்கவில்லை. குடிநீர் இணைப்பு கண்டிப்பாக வழங்கப்படும்” என்றார்.