

திருவண்ணாமலை: ஜவ்வாதுமலையில் இருந்து திருவண்ணாமலைக்கு பள்ளி நேரங்களில் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி நேற்று அரசுப் பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள், மலைவாழ் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் இருந்து போளூர் வழியாக திருவண்ணாமலைக்கு பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் நேரத்தில் தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. அரசுப் பேருந்து இயக்கவில்லை. இந்நிலையில் தனியார் பேருந்தில் நேற்று மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள், மலைவாழ் மக்கள் பயணம் செய்துள்ளனர்.
ஜவ்வாதுமலை அடிவாரத்தில் தும்பகாடு அடுத்த அம்மன் கோயில் அருகே சென்றபோது தனியார் பேருந்து திடீரென பழுதடைந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் மழைவாழ் மக்கள், ஜமுனாமரத்தூர் (ஜவ்வாதுமலை) நோக்கி சென்ற அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், பள்ளி நேரங்களில் அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர், அவர்களிடம் பேருந்தில் பயணித்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அரசுப் பேருந்து விடுவிக்கப்பட்டது. பின்னர், தனியார் பேருந்தும் பழுது நீக்கப்பட்டு இயக்கப் பட்டது.