Published : 30 Nov 2017 09:40 AM
Last Updated : 30 Nov 2017 09:40 AM

இந்திய நாட்டில் உற்பத்தி துறையில் பொருட்களை கையாளும்போது அதிக விபத்துகள்: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் தகவல்

தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் தேசிய பாதுகாப்பு குழுமத்தின் தமிழ்நாடு பிரிவு சார்பில் பொருட்களைக் கையாளுவதில் பாதுகாப்பு குறித்த பயிலரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநரும், தேசிய பாதுகாப்பு குழுமத்தின் தமிழ்நாடு பிரிவுத் தலைவருமான கே.காளியண்ணன் பங்கேற்று பயிலரங்கைத் தொடங்கிவைத்தார்.

பின்னர் பயிலரங்க மலரை வெளியிட்டு அவர் பேசியதாவது: நாட்டில் உற்பத்தி துறையில் பொருட்களைக் கையாளுவதற்கு மட்டும் சுமார் 50 சதவீத நேரம் செலவிடப்படுகிறது. இத் துறையில் 30 முதல் 40 சதவீத விபத்துகள் பொருட்களைக் கையாளும்போது ஏற்படுகிறது. இத் துறையில் ஒரு டன் பொருட்களை உற்பத்தி செய்ய சுமார் 60 முதல் 100 டன் பொருட்களைக் கையாள வேண்டியுள்ளது.

அதனால் பணியாளர்களும், பயிற்சி பெறுவோரும் பாதுகாப்புப் பயிற்சிகளில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்களா என நிர்வாகத்தினர் கண்காணிக்க வேண்டும்.

சுய பாதுகாப்புக் கருவிகள்

பணியாளர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் கண் பரிசோதனை, செவித்திறன் பரிசோதனை நடத்த வேண்டும். அவர்களுக்கு சுய பாதுகாப்புக் கருவிகளை வழங்கி, பாதுகாப்பாக பணி புரிய வைக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் தமிழக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இணை இயக்குநர் எஸ்.ஆனந்த், தேசிய பாதுகாப்பு குழுமத்தின் தமிழகப் பிரிவு துணைத் தலைவர் டி.பாஸ்கரன், செயலர் பி.ராஜ்மோகன், இணைச் செயலர் எம்.சூரியநாராயணன் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x