Published : 09 Nov 2017 08:19 PM
Last Updated : 09 Nov 2017 08:19 PM

ஸ்டாலினுக்கு இப்போதுதான் ஞானம் வந்ததா? திமுகவின் அனைத்து வழக்குகளையும் முறியடிப்போம்: முதல்வர் பழனிசாமி பேச்சு

 

10 ஆண்டுகாலம் பொறுப்பில் இருந்தபோது ஸ்டாலின் சென்னை மாநகரத்தைப் பற்றிச் சிந்திக்கவில்லையா? இப்போதுதான் ஞானம் வந்துவிட்டதா என்று விமர்சனம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுகவினர் போடும் அத்தனை வழக்குகளையும் முறியடிப்போம் என்று பேசினார்.

தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் சாலையில் உள்ள  எம்ஜிஆர் திடலில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூம் அன்பழகன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

''எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையிலே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகின்றேன் என்று சொல்லி ஒரு சில இடங்களுச் சென்று பார்த்துவிட்டு பேட்டி கொடுக்கிறார். அவர் தாழ்வான பகுதிகளிளெல்லாம் மழைநீர் தேங்கியிருக்கின்றது. இந்தத் தண்ணீரை அகற்றமுடியாத அரசு தேவைதானா? செயலிழந்த அரசு என்று அரசைப்பற்றி விமர்சனம் செய்கின்றார்.

நாங்கள் கேட்கின்றோம். இவர் ஐந்தாண்டு காலம் சென்னையினுடைய மேயராகவும் இருந்தார், ஐந்தாண்டு காலம் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும், ஆக 10 ஆண்டுகாலம் சென்னை மாநகரத்தில் எதுவுமே செய்யவில்லை. ஆனால், இரண்டு பொறுப்புகளையுமே, பதவிகளையுமே உள்ளாட்சி அமைப்பின்கீழ் வருகின்ற பதவி. இந்த உள்ளாட்சி அமைப்பின் மூலம் நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று சொன்னால் இந்த இரண்டு பொறுப்புகளையும் அவர் வைத்திருந்தார். ஏன் அப்பொழுதெல்லாம் இந்த சென்னை மாநகரத்தைப் பற்றிச் சிந்திக்கவில்லையா? இப்பொழுதுதான் ஞானம் வந்துவிட்டதா?

தமிழக அரசு விரைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இன்றைக்கு சென்னை மாநகரத்தில் மழைக்காலங்களிலே தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்பது மாநகராட்சி ஊழியர்களால் உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகின்றது. ஆனால் ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் வாரத்திற்கு ஒரு முறைதான் சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கே சென்றதாகச் சொல்கின்றார்கள். சென்னை மாநகரத்தை சுற்றிப் பார்க்கவில்லை. இப்பொழுது நாள்தோறும் கொளத்தூர் பகுதிக்கு செல்கிறார். அப்பொழுதுபோய் பார்த்திருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது. இப்பொழுது செல்வதைப்போல ஸ்டாலின் மேயராக இருந்தபொழுதும், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபொழுதும் சென்னை மாநகராட்சிப் பகுதியை எல்லாம் சுற்றிச் சுற்றி வலம் வந்திருந்தால் இந்த தண்ணீர் தேங்கியிருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது. அப்பொழுதெல்லாம் கோட்டை விட்டுவிட்டார். அவருக்கு மக்கள் பதவி கொடுத்தபொழுது அந்தப் பதவியை சரியாகச் செய்ய தவறிவிட்ட காரணத்தினால் மக்கள் அவரை மறந்தார்கள், இன்றைக்கு எதிர்க்கட்சியாகித் தலைவராகிவிட்டார்.

ஆனால், ஜெயலலிதாவின் அரசைப் பொறுத்தவரைக்கும், ஜெயலலிதா இருந்தபொழுதோ, சென்னை மாநகர மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, வடிகால் வசதி செய்து தரவேண்டுமென்பதற்காக மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்காமல் அகற்றப்படவேண்டுமென்பதற்காக, சென்னை மாநகர மக்களுக்கு பாதிப்பில்லாமல் உருவாக வேண்டுமென்பதற்காக, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் கிட்டத்தட்ட ரூபாய் 4034 கோடி ஒதுக்கீடு செய்து முதற்கட்டமாக ரூபாய் 1101 கோடி மதிப்பீட்டிலே திட்டம் தீட்டப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. கிட்டத்தட்ட 386 கி.மீ. நீளத்திற்கு கால்வாய் அமைக்கும் பணி துவங்கப்பட்டு, இப்பொழுது 300 கி.மீ. வரை பணி முடிந்து, எஞ்சியுள்ள பணிகள் விரைவாக முடிக்கப்படும்.

அதேபோல, மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு, முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுவிட்டது. இரண்டாம் கட்டம் ரூபாய் 1800 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்தப் பணியும் விரைந்து முடிக்கப்பட்டு, கொசஸ்தலை ஆற்றில் வடிநில பகுதிகளில் வடிகால் வசதி செய்து கொடுக்கின்ற பணி மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், ஆரம்பிக்கப்பட்டு அமல்படுத்தப்படும்.

அதேபோல, கூவம் மற்றும் அடையார் வடிநில பகுதிகளில் வெள்ளம் பாதிப்புகளைத் தடுக்க உலக வங்கி நிதியுதவி ஆதாரத்தில் நிதிகளை பெற்று அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது. அரசு தொடர்ந்து மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றது. இன்றைக்கு சென்னை மாநகரத்திலே எப்பொழுது மழை வெள்ளம் வந்தாலும், தாழ்வான பகுதியிலே தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கின்றது.

திமுக ஆட்சிகாலத்தில் எதுவுமே செய்யாமல் தவற விட்டுவிட்டார்கள். ஜெயலலிதா ஆட்சியில்தான் திட்டம் தீட்டப்பட்டு செயலாக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. வேண்டுமென்றே வறட்சி வந்தாலும், வெள்ளம் வந்தாலும் அரசைக் குறை கூறுவது என்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல, ஆட்சி அதிகாரத்திலே கிட்டத்தட்ட 14 ஆண்டு காலம் திமுகவினர் இருந்தார்கள். மத்தியிலே காங்கிரஸ் தலைமையிலே ஆட்சி நடைபெற்ற பொழுதும், பாஜக ஆட்சி நடைபெற்றபொழுதும், நாடாளுமன்ற அமைச்சர்களாக இருந்தார்கள். ஆனால், தமிழ்நாட்டிற்கு என்ன நன்மை செய்தார்கள் என்பதை மட்டும் மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

உள்ளாட்சி மன்றத் தேர்தலை, அதிமுக நடத்தவில்லை என்று சொல்கின்றார். ஜெயலலிதா இருக்கின்றபொழுதே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டார்கள். தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார்கள். திமுகவினர்தான் நீதிமன்றத்திற்குச் சென்று தடையாணை பெற்றார்கள். நாங்கள் தடுக்கவில்லை. திமுகவினர்தான் தடுத்தார்கள். நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என்பதையும் இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

துணை முதல்வரும், நானும் ஆட்சியிலும், கட்சியிலும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுவோம். நீங்களும் எது, எதையோ நினைத்தீர்கள். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு இந்த இயக்கம் இருக்காது என்று நினைத்தீர்கள். ஒரு தொண்டன்கூட இந்த இயக்கத்திலிருந்து விலகவில்லை, தொட்டுக்கூட யாராலும் பார்க்க முடியவில்லை.

ஆகவே அதிமுக தொண்டனுடைய உடலிலே ஓடுகின்ற இரத்தம் விசுவாசமுன்ன இரத்தமாக இருக்கின்ற காரணத்தினாலே, ஒரு தொண்டனைக்கூடி, நீங்கள், எங்கள் இயக்கத்திலிருந்து விலக்க முடியாது. ஆகவே, விசுவாசமுள்ள தொண்டர்களும், பொதுமக்களும் இருக்கின்றவரை, இந்த இயக்கத்தை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.

பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம். குடிமராமத்துத் திட்டம். தேனி மாவட்டம் விவசாய பூமி நிறைந்த பகுதி. மழைக்காலங்களில் குடிமராமத்துத் திட்டத்தின் மூலமாக அங்கே இருக்கின்ற ஏரிகள், குளங்களை ஆழப்படுத்தி, கிடைக்கும் வண்டல்மண்ணை விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு இயற்கை உரங்களாக இட்டு பயன்படுத்துகின்றார்கள். பருவமழை பொழிவதால், குளங்களை ஆழப்படுத்துவதன் மூலமாக நீர் அதிகமாக சேமிக்கப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர் உயருகிறது. விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்கின்றது. குடிநீருக்குத் தேவையான நீர் கிடைக்கின்றது. அற்புதமான திட்டத்தை நாங்கள் உருவாக்கித் தந்திருக்கின்றோம். முதற்கட்டமாக, ரூபாய் 100 கோடி ஒதுக்கி, 519 ஏரிகளை தூர்வாரியிருக்கின்றோம். மேற்கொண்டு ரூபாய் 300 கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கினோம், பருவமழை துவங்கிய காரணத்தினாலே, நிறுத்தி வைத்திருக்கின்றோம். எதிர்க்கட்சித்தலைவர் எங்கே ரூபாய் 400 கோடி என்று கேட்கின்றார். நாங்கள் ரூபாய் 100 கோடிதான் செலவு செய்திருக்கின்றோம். ரூபாய் 300 கோடிக்கா பணி இன்னும் துவங்கப்படவில்லை என்பதையும் உங்களிடத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன். அதுகூட தெரியாமல் அவர் சொல்லிக் கொண்டிருக்கின்றார்.

அதுமட்டுமல்ல, அவருடைய திட்டமெல்லாம், நம்மோடு இருக்கின்ற ஒருவரோடு சேர்ந்துகொண்டு, இந்த ஆட்சியை கலைக்கவேண்டும் என்பதுதான். எப்பொழுது பார்த்தாலும் வழக்கு போட்டுக்கொண்டிருக்கின்றார்கள். வழக்கு நடைபெறாத நாளே இருக்காது. அத்தனை வழக்குகளையும் முறியடித்து வெற்றி பெறுவோம். நியாயத்தின் அடிப்படையில் எங்களுக்கு நீதி கிடைக்கும். அந்த நீதி கிடைக்கும்போது, துணை முதல்வர் குறிப்பிட்டதைப்போல இரட்டை இலையும் எங்களுக்குக் கிடைக்கும். ஆகவே, இரட்டை இலை கிடைக்கின்றபோது, இந்த நாட்டு மக்களிடையே, இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நாங்கள் தொடர்ந்து நனவாக்குவோம்'' என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x