Published : 25 Nov 2017 10:03 AM
Last Updated : 25 Nov 2017 10:03 AM

பைனான்சியர் அன்புச்செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னையில் நேற்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திரைப்படத் துறையைச் சேர்ந்த அசோக்குமார் கந்து வட்டிக்காரர் அன்புச்செழியனைக் குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தயாரிப்பாளர் ஜீவி போன்றவர்கள் அதீத வட்டி பிரச்சினை, கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதை தமிழகம் சந்தித்தது.

சம்பந்தப்பட்ட கந்துவட்டிக்காரர் அன்புச்செழியன் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவரைப் பாதுகாக்க அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வருகின்றன. தமிழக அரசும், காவல் துறையும் அன்புச்செழியனை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் புதிதாக 70 மணல் குவாரிகள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கட்டுமானப் பணிகளுக்கு தேவையான மணலை உத்தரவாதப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதேநேரத்தில் ஆறுகளை பாதுகாக்க வேண்டிய கடமையும் உள்ளது. அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதால் ஆறுகள் வறண்டு, நிலத்தடி நீர் இல்லாமல் போய்லிட்டது. இவற்றை கணக்கில் கொள்ளாமல் மணல் கொள்ளையை தொடரும் நோக்கத்தோடு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, புதிதாக மணல் குவாரிகள் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். மணல் தேவையைப் பூர்த்தி செய்ய செயற்கை மணல், இறக்குமதி மணல் போன்ற நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x