

சென்னை: கருணாநிதி நினைவு நாள் அமைதிப் பேரணியில் பங்கேற்றிருந்த நிலையில் உயிரிழந்த சென்னை மாகராட்சியின் 146-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஆலப்பாக்கம் கு. சண்முகம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "பெருநகரச் சென்னை மாகராட்சியின் 146-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஆலப்பாக்கம் கு.சண்முகம் , இன்று (7-8-2023) கருணாநிதி நினைவு நாள் அமைதிப் பேரணியில் பங்கேற்றிருந்த நிலையில் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரும் அடைந்தேன்.
மதுரவாயல் பகுதியில் கட்சியை வளர்த்த செயல்வீரரான அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர், கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, திங்கள்கிழமை காலை, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை மாவட்ட திமுக சார்பில், அமைதிப் பேரணி நடைபெற்றது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலையில் இருந்து இந்த அமைதிப் பேரணி புறப்பட்டுச் சென்றது.
இப்பேரணியில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இந்தப் பேரணியில் கலந்துகொண்ட, திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், சென்னை மாநகராட்சியின் 146வது வார்டு உறுப்பினருமான ஆலப்பாக்கம் சண்முகத்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.