

சென்னை: தடுப்பூசிகளைத் தவறவிட்ட குழந்தைகள் உட்பட 60 ஆயிரம் பேருக்கு முதல்கட்ட சிறப்புத் தவணை தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தேசிய தடுப்பூசி அட்ட வணையின்கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம் பிள்ளை வாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ஃப்ளூயன்ஸா தொற்று, நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும் ரூபெல்லாநோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், விட்டமின்-ஏ குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் 9.40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 11 ஆயிரம் இடங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றன.
மத்திய அரசு அறிவுறுத்தல்: இந்நிலையில் தமிழகத்தில் ஏதாவது ஒரு தவணை தடுப்பூசியைத் தவறவிட்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் 60 ஆயிரம் பேர் உள்ளதாக பொது சுகாதாரத் துறை தரவுகளில் தெரியவந்துள்ளது. தடுப்பூசியைத் தவறவிட்டவர்களுக்கான இந்திரதனுஷ் 5.0 சிறப்புத் தவணை தடுப்பூசி முகாமை மூன்று கட்டங்களாக நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, முதல் கட்ட முகாம் ஆகஸ்ட் 7 முதல் 12-ம்தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட முகாம் செப்டம்பர் 11 முதல் 16-ம் தேதி வரையிலும், மூன்றாம்கட்ட முகாம் அக்டோபர் 9 முதல் 14-ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
விழிப்புணர்வு நடவடிக்கை: சிறப்புத் தவணை தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வை பதாகைகள், சுவரொட்டிகள், ஆடியோ மற்றும் விடியோ பதிவுகள் மூலம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கு பொதுசுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வழங்கியுள்ளார். அதற்கான பல்வேறு வழிகாட்டுதல்களும் பொது சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ளன.