

சென்னை: தமிழக அரசின் சிறுதானிய இயக்கம் 20 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி கூறினார்.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், ‘உணவு, ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்துக்கான வலிமைமிக்க சிறுதானியங்கள்’ என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு தொடக்க விழா, சென்னை தரமணியில் உள்ள அறக்கட்டளை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்ற, தமிழக உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி, அறக்கட்டளையின் ஆண்டறிக்கையை வெளியிட்டார்.
தொடர்ந்து, சிறுதானியக் கண்காட்சியைத் திறந்துவைத்துப் பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது: தமிழ்நாடு சிறு தானிய இயக்கத்தின் கீழ், சிறு தானியங்கள் பயிரிட தமிழக அரசு 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், ஐந்தாண்டு சிறு தானிய இயக்கத் திட்டத்தை, தமிழக அரசு 20 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த உள்ளது. பொது விநியோகத் திட்டம் மூலம் மானிய விலையில் சிறு தானியங்கள் விநியோகிக்கப்படும்.
மேலும், தரிசு நிலத்தைச் சிறு தானியச் சாகுபடியின் கீழ் கொண்டுவர ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த நடவடிக்கை ‘விவசாய நிலங்களில் பயிர் பன்முகத்தன்மை’யை உறுதி செய்யும்.
கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகிய அனைத்தும் நம் ஆரோக்கியத்துக்கு அவசியம். தினசரி உணவில் அனைத்து வகையான சிறு தானியங்களைச் சேர்ப்பதன் மூலம் இத்தகைய ஊட்டச்சத்துகளைப் பெற முடியும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், அறக்கட்டளைத் தலைவர் சவுமியா சுவாமிநாதன், நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளர்ச்சித் துறை பேராசிரியர் ரூத் டிஃப்ரைஸ், ஐக்கிய நாடுகள் சபை உலக உணவு திட்டத்தின் இந்திய இயக்குநர் எலிசபெத் ஃபாரே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.