Published : 25 Apr 2014 06:12 PM
Last Updated : 25 Apr 2014 06:12 PM

மூவர் வழக்கின் தீர்ப்பு விவகாரம்: கருணாநிதி மீது வைகோ கடும் தாக்கு

பேரறிவாளன் உள்பட மூவர் வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில், திமுக தலைவர் கருணாநிதி வலிய வந்து கருத்து தெரிவித்தது சரியல்ல என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வேதனை தருவதாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, குடியரசுத் தலைவர் கருணை மனுக்களை நிராகரித்து, 2011 செப்டெம்பர் 9 ஆம் தேதியன்று, அவர்களது உயிர் பறிக்கப்படும் என்று, தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில், உலகப் புகழ் பெற்ற வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, 2011 ஆகஸ்ட் 30 ஆம் நாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடியதால், நீதி அரசர்கள் நாகப்பன், சத்யநாராயணா ஆகியோர் அமர்வு தண்டனையை நிறைவேற்றுவதற்குத் தடை விதித்தது.

அதற்கு முதல்நாள்தான், 2011 ஆகஸ்ட் 29 இல், இந்த மூன்று தமிழர் தூக்குத் தண்டனையில் தலையிட தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை கிடைக்கப் போவதை அறிந்து, இம்மூவரின் தூக்குத் தண்டனையைக் குறைக்குமாறு குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை விடுத்துச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.

பின்னர் காங்கிரஸ் கட்சியின் வஞ்சகப் போக்கால், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, அங்கும், ராம் ஜெத்மலானியின் வாதங்களால், 2014 பிப்ரவரி 18 இல் இவர்களது தூக்குத் தண்டனை நிரந்தரமாக ரத்துச் செய்யப்பட்டது.

இதற்குச் சில நாள்களுக்கு முன்பு, இதே வழக்கில் முதலாவது பிரதிவாதியான நளினி, 22 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் நிலையில், உடல் நலம் குன்றிய தந்தையைப் பார்ப்பதற்காக, உயர் நீதிமன்றத்தில் பரோல் விடுதலைக்கு விண்ணப்பித்தபோது, ஜெயலலிதா அரசு உயர் நீதிமன்றத்தில் அதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது.

அதே முதலமைச்சர் ஜெயலலிதாதான், மூன்று தமிழர்கள் தூக்குத் தண்டனை உச்ச நீதிமன்றத்தில் ரத்து ஆனவுடன், இந்த மூவர் உள்ளிட்ட ஏழு பேர்களையும் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யத் தனது அமைச்சரவை முடிவு எடுத்து விட்டதாகவும், மூன்று நாள்களுக்குள் மத்திய அரசு பதில் தராவிடில், தான் விடுதலை செய்யப் போவதாகவும் அறிவித்தார்.

இதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கில் இன்று (25.4.2014) தலைமை நீதிபதி சதாசிவம் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அமர்வு, மேற்கூறிய வழக்கு அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றப்படுவதாக வழங்கி உள்ள தீர்ப்பு எனக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. ஏனெனில், இந்த ஏழு பேருமே திருபெரும்புதூர் சம்பவத்தில் துளியும் தொடர்பு இல்லாத குற்றம் அற்ற நிரபராதிகள் ஆவர். ஏறத்தாழ 23 ஆண்டுகளாகச் சிறையில் மனதளவில் சித்திரவதைக்கு ஆளாகி வாடி வதங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். மனிதாபிமான அடிப்படையில் இவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாக வேண்டும்.

இதைச் சொல்லுகின்ற தகுதி எனக்கு உண்டு. ஏனெனில், 1978 ஆம் ஆண்டு, டிசம்பர் 5 ஆம் தேதி, இந்திய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் நடைபெற்ற விவாதத்தில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 433 (ஏ) பிரிவு திருத்த மசோதாவை, இந்திய நாடாளுமன்றத்திலேயே எதிர்த்தவன் நான் மட்டும்தான்.

அந்தத் திருத்தத்தின்படி, 14 ஆண்டுகளுக்கு முடிவு அடையும் முன்பு ஆயுள் தண்டனைச் சிறைவாசி எவரும் விடுதலை செய்யப்படக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது. இது மனிதநேயத்திற்கு எதிரானது என்று நான் கடுமையாக எதிர்த்தேன். "கோட்டை அகழியின் அடிவாரத்தில், அந்தகாரம் படைத்த இருட் குகையில் கிடந்து துடிக்கும் ஜீவன்கள் அந்த சிறைப்பறவைகள்" என்ற சார்லஸ் டிக்கன்சின் புகழ்மிக்க வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினேன்.

பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள எல்லாக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று, கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள் விழாவுக்கு முன்னர், தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகிறேன். தி.மு.க. அரசும் இதைச் செயல்படுத்தவில்லை. ஜெயலலிதா அரசும் இதனை ஏற்கவில்லை.

எந்தப் பிரச்சினை ஆனாலும் வலிய வந்து மூக்கை நுழைத்துக் கெடுதல் செய்வதே கருணாநிதிக்கு வாடிக்கையான ஒன்றாகும்.

ஏழு பேரின் விடுதலையை, உலகெல்லாம் உள்ள தமிழர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த நேரத்தில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதி அரசர் சதாசிவம், விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வரும் என்று சொன்னதைக் குறைகூறிக் குறுக்குச்சால் ஓட்டிய மகானுபாவர்தான் கருணாநிதி ஆவார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவர் உள்ளிட்ட ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருந்தேன். இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.

எனினும், உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வில், இவர்கள் சிறையில் இருந்து விடுதலை பெறும் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். அப்படிக் கிடைத்தாலும் அது காலம் கடந்த நீதிதான்" என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x