

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி, திமுக சார்பில் ‘கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மாரத்தான்-2023’ சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், முதல்முறையாக ஒரே இடத்தில் 50,629 ஆண்கள், 21,514 பெண்கள் என 73,206 பேர் பங்கேற்று கின்னஸ் சாதனை படைத்தனர்.
இந்தப் போட்டி 42, 21, 10 மற்றும் 5 கி.மீ. ஆகிய 4 பிரிவுகளில் நடைபெற்றது. 1,063 திருநங்கை, திருநம்பிகள், 500-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், 1,500 கடலோர காவல் படை, ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் 42 கி.மீ.தொலைவு மாரத்தான் ஓட்டத்தைஅமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 21, 10, 5 கி.மீ. தொலைவு மாரத்தான்ஓட்டங்களை தொடங்கி வைத்தார். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை வழியாக நடைபெற்ற மாரத்தான் ஓட்டம்,மீண்டும் கருணாநிதி நினைவிடத்தில் முடிவடைந்தது. இதையொட்டி, நேற்று அதிகாலை இலவச மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டது. மேலும், வழியெங்கும் இசைக் கலைஞர்கள் திரண்டு,போட்டியாளர்களை ஊக்குவித்தனர்.
பின்னர், தீவுத்திடலில் நடைபெற்றநிறைவு விழாவில், ‘கின்னஸ்’ உலக சாதனைக்கான சான்றிதழை, அக் குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். தொடர்ந்து, போட்டியில் வென்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்கினார். மேலும், போட்டியில் பங்கேற்ற திருநங்கை, திருநம்பிகளுக்கு திமுக இளைஞரணி சார்பில்தலா ரூ.1,000 ஊக்கத் தொகையை, அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
மாரத்தான் போட்டி பதிவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ.3.43 கோடியை,ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ``சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாரத்தான் போட்டியை கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பாகநடத்தி வருகிறார். 2020-ல் பதிவுக் கட்டணமாக கிடைத்த ரூ.23 லட்சத்தை பேரிடர் நிவாரண நிதிக்கும், 2021-ல் கிடைத்த ரூ.56 லட்சத்தை கரோனா நிவாரண நிதிக்கும் வழங்கினார்.
கடந்த ஆண்டு மாரத்தானில் 43,231பேர் பங்கேற்றது, ஆசிய சாதனையாக அமைந்தது. அப்போது கிடைத்த ரூ.1.22கோடி எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
தற்போது நடைபெற்ற போட்டியில் 73,206 பேர் கலந்துகொண்டு ‘கின்னஸ்’ சாதனை படைத்துள்ளனர். இது சாதாரணமாரத்தான் அல்ல, சமூகநீதிக்கான மாரத்தான். மாரத்தான் ஓட்டம் உடல்உறுதிக்கு மட்டுமல்ல, உள்ள உறுதிக்கும் அடித்தளம் அமைக்கும். மக்களைசுறுசுறுப்பாக வைத்திருக்க, இதுபோன்ற போட்டிகள் அதிகம் நடத்தவேண்டும். உதயநிதி விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அந்த துறை பல மடங்கு எழுச்சி பெற்றிருக்கிறது என்றார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு, மனோ தங்கராஜ், எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதிவீராசாமி, சுகாதாரத் துறைச் செயலர்ககன்தீப் சிங் பேடி, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், ‘இந்து’ என்.ராம், அப்போலோ மருத்துவமனை துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி, காவேரி மருத்துவமனை தலைவர் சந்திரகுமார், ஐஓபி மேலாண் இயக்குநர் அஜய்குமார், புனித தோமையார் மலைதெற்கு ஒன்றிய இளைஞரணி துணைஅமைப்பாளர் ஓகேஎஸ்.சதீஷ், பல்வேறு வெளிநாட்டு தூதர்கள் பங்கேற்றனர்.