Published : 07 Aug 2023 06:13 AM
Last Updated : 07 Aug 2023 06:13 AM

வடசென்னை வளர்ச்சித் திட்டம் குறித்த சமூக, பொருளாதார, உளவியல் கணக்கெடுப்பு தொடக்கம்

சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டம் குறித்தசமூக, பொருளாதார, உளவியல் நலன்கணக்கெடுப்பை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் கூறியதாவது: வட சென்னை பகுதி மேம்பாட்டுக்காக `வட சென்னை வளர்ச்சி திட்டம்'என்ற புதிய திட்டத்தை உருவாக்கி அத்திட்டத்துக்காக ரூ.1000 கோடி மூன்றாண்டுகளில் செலவிடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி வட சென்னை வளர்ச்சிதிட்டம் சமூக, பொருளாதார, உளவியல் நலன் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இப்பணிக்காக, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், பெருநகர சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்ககம் ஆகியதுறைகள் ஒருங்கிணைந்து கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள உள்ளன.

இக்கணக்கெடுப்பு பணிக்காக மகளிர் கிறிஸ்தவ கல்லூரியிலிருந்து 500 மாணவிகள், 22 பேராசிரியர்கள் மற்றும் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியிலிருந்து 500 மாணவ, மாணவிகள் 42 பேராசிரியர்கள் ஈடுபடவுள்ளனர்.

சென்னை மாநகராட்சியின், திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிகநகர், அண்ணாநகர் உள்ளிட்ட 7 மண்டலங்களில் 1000 மாணவ, மாணவிகளும் தலா 10 பேர் வீதம் 100 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்கின்றனர். இந்த 7 மண்டலங்களில் பல்வேறு தரப்பு மக்களிடையே 13 இடங்களில் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இந்த கணக்கெடுப்புப் பணியின் மூலம் அப்பகுதி மக்களின் பொருளாதார முன்னேற்றம், சமூக மாற்றங்கள் மற்றும் உளவியல் ரீதியான தேவைகளை அறிந்து அவர்களுக்கு ஏற்றார் போல் திட்டங்களை வகுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, வீட்டுவசதித் துறைச் செயலர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சி‌க் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமேலாண்மை இயக்குநர் பொ.சங்கர், நகர ஊரமைப்பு இயக்குநர் பா.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x