Published : 07 Aug 2023 06:17 AM
Last Updated : 07 Aug 2023 06:17 AM
திருவள்ளூர்: அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 3 ரயில் நிலையங்கள், செங்கல்பட்டில் செங்கை மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய ரயில் நிலையங்கள் என 5 நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக பிரதமர் நரேந்திரமோடி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
508 ரயில் நிலையங்கள்: ‘அம்ரித் பாரத் ரயில் நிலைய’ திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்கள் இதன் உலகத்தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளன. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி ஆகிய 3 ரயில் நிலையங்கள் ரூ.60.04 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட உள்ளன. இந்த மறுசீரமைப்பு பணியில், புதிய நுழைவு வாயில்கள், மின் தூக்கி, கூடுதல் நடைமேம்பாலங்கள், நகரும் படிக்கட்டுகள், வாகன நிறுத்தம் உள்ளிட்டவை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.
இந்த விழா திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி ஆகிய ரயில் நிலையங்களில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது. காணொலி மூலம் பிரதமர் நரேந்திரமோடி மறுசீரமைப்புக்கு அடிக்கல் நாட்டி திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி ஆகிய ரயில் நிலையங்களில் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வுகளில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட முதன்மை வணிக மேலாளர் சுப்ரமணியன், முதுநிலை கோட்ட நிதி மேலாளர் ஆனந்த் பாட்டியா, கோட்ட வணிக மேலாளர் ஜெயந்தி உள்ளிட்ட ரயில்வே உயரதிகாரிகள் மற்றும் பாஜக மாநில துணை தலைவர் சக்ரவர்த்தி உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செங்கல்பட்டு ரயில் நிலையம்: இதேபோல் செங்கல்பட்டு ரயில் நிலையமும் ரூ.22.14 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்படவுள்ளது. இப்பணியையும் பிரதமர் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக காஞ்சி எம்.பி. செல்வம் தலைமை தாங்கி கல்வெட்டை திறந்து வைத்தார். பின்னர் இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
கூடுவாஞ்சேரி ரயில் நிலையம்: இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், எம்எல்ஏ வரலட்சுமி, செங்கல்பட்டு நகர மன்ற தலைவர் தேன்மொழி உட்பட அரசு அலுவலர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர். இதேபோல் கூடுவாஞ்சேரி ரயில் நிலையமும் மறுசீரமைப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விழாவில் இரு வேறு சலசலப்புகள்: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற அம்ரித் திட்ட விழாவில், காணொலிக் காட்சி மூலம் பிரதமர் பங்கேற்பதற்கு முன்பு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமார் பேசும்போது, மணிப்பூர் கலவரம் பற்றி குறிப்பிட்டார். இதனால் கோபமடைந்த பாஜகவினர், ஜெயக்குமாரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதையடுத்து, எம்.பி. மற்றும் பொன்னேரி எம்எல்ஏ துரை. சந்திரசேகர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர், விழா நடந்த பகுதியிலிருந்து வெளியேறினர். இதனால், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டில் நடந்த நிகழ்ச்சியில் எம்.பி. எம்எல்ஏ, உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கென மேடையின் முன் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு கல்வெட்டிலும் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத்துக்கு முன் வரிசையில் இருக்கையும் ஒதுக்கப்பட்டவில்லை கல்வெட்டிலும் பெயர் இடம்பெறவில்லை. இந்த சம்பவம் அங்கிருந்த மக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்களிடமும் சலசலப்பை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT