Published : 30 Nov 2017 10:17 AM
Last Updated : 30 Nov 2017 10:17 AM

கிருஷ்ணகிரி அணையின் மதகு கதவில் உடைப்பு: 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்; 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அணையின் 8 பிரதான மதகுகளில் முதல் மதகின் ஷட்டரில் நேற்று மாலை உடைப்பு ஏற்பட்டு விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி வருவதால் 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அணையில் நேற்று மாலை 4 மணியளவில் பிரதான முதல் மதகின் ஷட்டரில் உடைப்பு ஏற்பட்டது. இதன் வழியாக அதிகளவு தண்ணீர் வெளியேறியது. மாவட்ட ஆட்சியர் கதிரவன், எஸ்பி மகேஷ்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சாம்ராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். உடைந்த மதகில் நீரின் அழுத்தம் அதிகமாக உள்ளதால், சீரமைப்புப் பணியை மேற்கொள்வதில் சிக்கல் நீடித்தது. அழுத்தத்தை குறைக்க 5-வது மதகு வழியாகவும் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதான முதல் மதகின் அடியில் சிறிய கசிவால் உடைப்பு ஏற்பட்டது. உடைந்த ஷட்டர் வழியாக 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஆற்றில் செல்கிறது. 5-வது மதகு வழியாக 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பொதுப்பணித்துறை உயர்மட்ட சிறப்பு குழுவினர் நாளை (30-ம் தேதி) அணையில் ஆய்வு மேற்கொண்டு சீரமைப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அணையின் மொத்த உயரமான 52 அடியில் 20 அடி உயரத்துக்கு மதகு அமைந்துள்ளது. இதனால், 20 அடி தண்ணீர் தான் வெளியேறும்.

குடிநீருக்கும், விவசாயத்துக்கும் பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருவாய், காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x