Published : 01 Nov 2017 09:42 AM
Last Updated : 01 Nov 2017 09:42 AM

அலுவலகம் இடம் மாற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு: நாகை தீயணைப்பு நிலைய கட்டிடத்தின் மேலும் சில பகுதிகள் இடிந்து விழுந்தன - கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது

நாகப்பட்டினத்தில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்தின் கூரைப்பகுதியில் மேலும் சில இடங்கள் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தன. சில தினங்களுக்கு முன் அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதால் உயிர் பலி உள்ளிட்ட அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.

நாகப்பட்டினம் வெளிப்பாளையம் மருத்துவமனை சாலையில் உள்ள 1946-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் நாகை தீயணைப்பு நிலைய அலுவலகம் செயல்பட்டு வந்தது. கடந்த 21-ம் தேதி அலுவலகத்தின் பயன்படுத்தப்படாத பகுதியில் மேற்கூரையில் இருந்து மர விட்டங்கள் பெயர்ந்து விழுந்தன. மேலும், அலுவலக பகுதியிலும் மேற்கூரையில் இருந்து சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்தது.

பொறையாறு அரசுப் பணிமனை கட்டிடம் இடிந்து விழுந்ததுபோல அசம்பாவிதம் நேரிடும் முன், இந்த பழமையான கட்டிடத்தை விட்டு தீயணைப்பு நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருக்கும் பழைய கட்டிடத்தை தீயணைப்பு நிலைய அலுவலகமாக பயன்படுத்திக்கொள்ள ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார். எனினும், தீயணைப்பு நிலையத்தினர் கட்டிடத்தை காலி செய்யவில்லை. இதனால், நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரியின் வேண்டுகோளை ஏற்று கடந்த 28-ம் தேதி தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ஆட்சியர் சுரேஷ்குமார் ஆகியோர் இக்கட்டிடத்தை பார்வையிட்டனர்.

எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் நிலையில் கட்டிடம் உள்ளதை அறிந்த அவர்கள், அன்றே அலுவலகத்தைக் காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், பழைய கட்டிடத்துக்கு சீல் வைக்கவும் கோட்டாட்சியருக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து, அன்றே தீயணைப்பு நிலையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு இடம் மாற்றப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் முழுவதும் பெய்த கனமழையால் தீயணைப்பு நிலைய பழைய கட்டிடத்தின் மேற்கூரையில் சில பகுதிகள் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தன. அலுவலகம் இடம் மாற்றப்பட்டதையடுத்து அங்கு யாரும் இல்லாததால் உயிர் பலி உள்ளிட்ட அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்த தகவலறிந்து நேற்று காலை அங்குசென்று பார்வையிட்ட கோட்டாட்சியர் கண்ணன், அக்கட்டிடத்தை முழுமையாக இடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, கட்டிடத்தை இடிக்கும் பணி நேற்று தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x