Published : 27 Nov 2017 09:06 AM
Last Updated : 27 Nov 2017 09:06 AM

மதுரையில் ‘தி இந்து - தமிழ்’ நடத்திய மகளிர் திருவிழா: சுமைகளை கூட சுகமாக எண்ணும் பெண்கள் - உயர் நீதிமன்ற நீதிபதி ஜெ.நிஷாபானு பெருமிதம்

‘சுமக்கத் தெரிந்து கொண்டால் சுமைகள் சுலபம்தான். சாதிக்க பழகிவிட்டால் தடைகளும் சவால்கள் தான். சில நேரம் சுமைகளைக்கூட பாரமாய் கருதும் உலகில் சுமைகளை சுகங்களாக எண்ணி வாழ்கின்றனர் பெண்கள்’ என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஜெ. நிஷாபானு பேசினார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் பெண் இன்று இணைப்பிதழ் சார்பில், மதுரை அமெரிக்கன் கல்லூரி அரங்கில் மகளிர் திருவிழா நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜெ. நிஷாபானு குத்துவிளக்கு ஏற்றி, இவ்விழாவைத் தொடங்கிவைத்து பேசியதாவது:

‘தி இந்து’ தமிழ் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் மகளிர் திருவிழா நடத்தப்பட்டு பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகளை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்விழா பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுபடச் செய்யும் பணியை செய்கிறது.

அண்மையில் உலக அழகி பட்டம் வென்ற ஹரியாணாவைச் சேர்ந்த மனுஷி சில்லரிடம், உலகில் யாருக்கு அதிக அளவில் சம்பளம் வழங்க வேண்டும் எனக் கேட்கப்பட்டது. அதற்கு உலகில் அதிகம் சம்பளம் பெற தகுதியான ஒருவர் அம்மாதான் என அவர் பதில் அளித்தார். அம்மா ஒரு பெண். அப்படிப் பார்க்கையில் பெண்தான் உயர்ந்தவர். பெண்கள் தாய், மனைவி, தங்கை, மகள் என பன்முகம் கொண்டவர் என வெ.ராமலிங்கனார் தெரிவித்துள்ளார்.

மங்கையராய் பிறக்கவே மாதவம் செய்திடல் வேண்டும் என பாரதியார் சொன்ன வார்த்தைகள், பெண்ணின் பெருமையை பறைசாற்றுகின்றன. சமூகத்தில் பெண்களுக்கு சம நீதி வழங்கப்படுகிறதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தியாவில் பெண்களின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 900 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் தான் ஆண், பெண் பிறப்பு உள்ளது. இது இயற்கைக்கு நல்லதல்ல. பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இது பிறப்பிலேயே பெண்ணுக்கு அநீதி வழங்குகிறோம் என்பதை காட்டுகிறது.

இன்றைக்கு பெண்களின் நிலைமை பரிதாபகரமாக உள்ளது. கர்ப்பமானால் பணியில் இருந்து விலக்கப்படும் சூழல் தனியார் நிறுவனங்களில் உள்ளது. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பதைபதைப்புடன் பெண்கள் வேலை பார்க்கின்றனர். பல நேரங்களில் பெண்கள் தனிமையில் அழுவது வெளி உலகுக்கு தெரியாத கண்ணீர் கதையாகும்.

பல்வேறு பகுதிகளில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிராக குற்றச் செயல்கள் நடக்கின்றன. பறக்க நினைக்கும் பெண்களின் சிறகுகளை கத்தரித்து விடுவோம் என எச்சரித்து பயமுறுத்தும் சமூகத்தில் அவர்களால் எப்படி நடைபோட முடியும்.

சிறு துன்பம், இழப்பு ஏற்பட்டாலே மனமுடைந்து மூலையில் முடங்கிப்போகும் பெண்களுக்கு ஹெலன் கெல்லரின் வாழ்க்கை ஒரு பாடம். பெண் அன்பில் ஒரு தாய், அழகில் தேவதை, அறிவில் மந்திரி, ஆதரவில் உறவு, வெறுப்பில் நெருப்பு, நட்பில் நேர்மை, கண்டிப்பில் ஆசிரியர். சுமக்க தெரிந்து கொண்டால் சுமைகள் சுலபம்தான். சாதிக்க பழகிவிட்டால் தடைகளும் சவால்கள்தான்.

சில நேர சுமைகளைக் கூட பாரமாய் கருதும் உலகில், சுமைகளை சுகங்களாக எண்ணி பெண்கள் வாழ்கின்றனர். ‘சாதனைப் பெண்ணே நீ வா முன்னே.. சோதனை வந்தால் நீ தகர்த்திடு கண்ணே.. எட்டு திசை எட்டும் வரை எட்டிடும் உன் புரட்சி அலை.. பெண்மையை போற்றுவோம்..! அனைத்து துறைகளிலும் பெண்கள் மென்மேலும் சாதனை படைக்க வாழ்த்துகிறேன் என்று பேசினார்.

விழாவுக்கு தலைமை வகித்து பசுமலை சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் செவிலியர் கல்லூரி முதல்வர் சி.ஜோதி ஷோபியா பேசியதாவது: ஆணோ, பெண்ணோ கல்வியால் மட்டும் நல்வாழ்வு வந்து விட்டால் போதாது. கற்ற கல்வி இச்சமூகத்துக்கு பயன்பட வேண்டும். மனம், ஆன்மிகம், சமூக நலத்தை ஒருங்கிணைந்து பார்க்க கண்கள் முக்கியம். இதயத்தின் வாசல் கண்கள். இதை சரியாக வைத்து கொண்டால் எல்லாம் சரியாக இயங்கும். கண்களுக்கு உகந்த பச்சை காய்கறிகளை சாப்பிடவேண்டும்.

கண்கள் வழியாக உள்ளே செல்வதை வடிகட்ட வேண்டும். லேப் டாப், கம்ப்யூட்டர், ‘வாட்ஸ் ஆப்’ பார்த்தால் கதிர்வீச்சு கண்களை பாதிக்கும். ஓய்வு நேரத்தில் பசுமைகளை பார்க்கும் இடங்களுக்கு அழைத்து செல்லவேண்டும். பசுமையை பார்க்கும் போது, கண்களுக்கு இதமாக இருக்கும். கம்ப்யூட்டரில் நல்ல கருத்துகளை மட்டுமே பார்க்க கற்றுத்தர வேண்டும். நேசமில்லாத இடங்களில் பிரச்சினைகள் வரும். குழந்தைகளுக்கு கடவுளை நேசிக்க கற்றுக் கொடுங்கள். தன்னை நேசிப்பது போல பிறரை நேசிக்க கற்றுத்தர வேண்டும். அன்புள்ள குழந்தைகளாக வளர கற்றுக்கொடுங்கள் என்றார்.

மகளிர் தொழில் முனைவோர் மையத் தலைவர் ராஜகுமாரி ஜீவகன் பேசியதாவது: வாழ்க்கை என்றாலே பிரச்சினைதான். போகிற பாதையில் பிரச்சினை இருந்தால் சரியான பாதையில் செல்கிறோம் என அர்த்தம். வாழ்க்கையை பெண்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதில்தான் வளர்ச்சி இருக்கிறது. அனைவருக்கும் சுய நம்பிக்கை, சுய வளர்ச்சி, சுய விழிப்புணர்வு வேண்டும். எந்த வேலையை செய்வதாக இருந்தாலும், சமநிலையில் இருந்தால் வெற்றி பெறலாம் என்றார்.

விழாவில் பெண்களுக்கு அழகு வேண்டுமா? வேண்டாமா? என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்றம் மதுரை செந்தமிழ் கல்லூரி உதவி பேராசிரியர் ஜி.ரேவதி சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. யாதவா மகளிர் கல்லூரி உதவி பேராசிரியர் எம்.தமிழ்ச்செல்வி, திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியை எஸ்.அன்பு கார்த்திகாயினி ஆகியோர் பட்டிமன்றத்தில் பேசினர்.

முற்றிலும் பெண்களே நடத்தும் திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினரின் பறையாட்டம் அரங்கை அதிர வைத்தது.

இட்லி சாப்பிடும் போட்டி, மவுன நாடகம், கூந்தலில் ஸ்டிரா குத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அமெரிக்கன் கல்லூரி முதல்வர் எம். தவமணி கிறிஸ்டோபர் சிறப்பு பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்சிக்காக விழா அரங்கை வழங்கி அமெரிக்கன் கல்லூரியும் இக்கொண்டாட்டத்தில் இணைந்தது. தி சென்னை சில்க்ஸ், அண்ணாச்சி விலாஸ் விஐபி இட்லி மாவு, சாஸ்தா கிரைண்டர், ஹேமா கண்ணன் புட்ஸ், பாண்டியன் ஊறுகாய் மற்றும் மசாலா, எஸ்விஎஸ் மாவு, பூர்ணகும்பம் தீப எண்ணெய், மெட்ரோபோல் ஹோட்டல், ராகா ரைஸ் பிராண்ட் ஆயில், பிரித்வி இன்னர் வேர், தைரோகேர் ஆகிய நிறுவனங்கள் பரிசுகளை வழங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x