Last Updated : 27 Nov, 2017 12:30 PM

 

Published : 27 Nov 2017 12:30 PM
Last Updated : 27 Nov 2017 12:30 PM

முறைப்படி நடைபெறாத இந்து திருமணங்களை பதிய முடியாது: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்து திருமண சட்டப்படி நடைபெறாத திருமணங்களை தமிழ்நாடு திருமணப் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனக்கும் தஞ்சாவூரை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் நடைபெற்ற திருமணத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த இளைஞர் அந்தப் பெண்ணை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்விரு வழக்குகளும் கும்பகோணம் முதன்மை சார்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.

விசாரணைக்குப்பின் இளம் பெண்ணின் திருமணம் செல்லாது என கும்பகோணம் நீதிமன்றம் 2015-ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இளைஞர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மனு ஏற்கப்பட்டு திருமணம் செல்லும் என கடந்த ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி அப்பெண் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜெ.நிஷாபானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இளம் பெண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீனிவாசராகவன் வாதிடும்போது, ‘இந்துக்கள் இருவர் திருமணம் செய்து கொண்டால் தமிழ்நாடு திருமணப் பதிவு சட்டம் 2009-ல் கீழ் தங்களின் திருமணத்தை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு இந்து திருமணம் சட்டப்பிரிவு 7 அல்லது 7 ஏ-ன் கீழ் இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்க வேண்டும். அவ்வாறு திருமணம் நடைபெறாத நிலையில் தமிழ்நாடு திருமணப் பதிவு சட்டம் 2009-ல் கீழ் பதிவு செய்ய முடியாது என்றார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்து மத வழக்கப்படி திருமணம் நடைபெற்றதற்கு ஆதாரங்கள் இல்லாத நிலையில் அந்த திருமணம் செல்லத்தக்கது எனக் கூற முடியாது. திருமணம் நடைபெற்றதா? இல்லையா? என கேள்வி எழும்பும் போது திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும். திருமணம் பதிவு செய்யப்பட்டதால் மட்டும் அந்த திருமணம் செல்லத்தக்க திருமணம் ஆகிவிடாது. இந்த வழக்கில் மனுதாரர் திருமண பதிவு நடைபெறுவதற்கு முன்பு இந்து முறைப்படி தங்களுக்கு திருமணம் நடைபெறவில்லை என்றும், கட்டாயப்படுத்தி திருமணத்தை பதிவு செய்ததாகவும் கூறியுள்ளார். எதிர்மனுதாரர் தரப்பில் திருமணத்துக்கு ஆதாரமாக புகைப்படம் ஒன்றை தாக்கல் செய்து, அதில் மணப்பெண் சிரித்தபடி தனக்கு மாலை அணிவிப்பதால் அவரது சம்மதத்தின் பேரில் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இந்து திருமண சட்டப்படி திருமணம் நடைபெறாத நிலையில், ஒரு திருமணத்தை செல்லத்தக்கது என அறிவிக்க திருமண புகைப்படத்தில் மணப்பெண் சிரித்தபடி மாலையிடுவதை போதுமான ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த வழக்கில் திருமணப் பதிவு நடைபெறுவதற்கு முன்பு இருவருக்கும் இந்து திருமணச் சட்டப்படி திருமணம் நடைபெறவில்லை. அப்படியிருக்கும் போது இவர்களின் திருமணத்தை தமிழ்நாடு திருமணப் பதிவு சட்டம் 2009-ல் கீழ் பதிவு செய்தது சட்டவிரோதம். இவர்களின் திருமணம் செல்லாது.

முறைகேடு, குழந்தை திருமணம், கணவர்களால் பெண்கள் கைவிடப்படுதல் போன்றவை நடைபெறாமல் தடுக்கவே திருமணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என சட்ட ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மனுதாரருக்கு நடைபெற்ற திருமணம் செல்லாது. எனவே மனுதாரரின் மனு ஏற்கப்பட்டு கும்பகோணம் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x