அண்ணாமலை நடைபயணம் தமிழகத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது: கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி | கோப்புப்படம்
கே.எஸ்.அழகிரி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: "அண்ணாமலை மேற்கொள்ளும் இந்த நடைபயணத்தால், அவர்களது கட்சியிலேயே எதுவும் ஏற்படாது. அது தமிழகத்திலும் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அண்ணாமலையின் நடைபயணத்துக்கு தமிழகத்தில் யாரும் அச்சப்படமாட்டார்கள்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபயணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்றதை பாதயாத்திரை என்றே சொல்லக்கூடாது. அவர் சொகுசு காரில் பயணம் செய்கிறார். ஒரு ஊர் வந்தவுடன் இறங்கி அங்கு நடக்கிறார். வீட்டில் நடந்தால், அதைக்கூட பாதயாத்திரை என்று கூறுவீர்களா? எனவே, இதற்கு பெயரெல்லாம் நடைபயணம் இல்லை.

எனவே, முதலிலேயே அவர் சொல்லியிருக்கலாம். நான் பரப்புரை செய்யப்போகிறேன். நான் செல்வது நடைபயணம் இல்லை என்று அவர் கூறியிருக்க வேண்டும். நடப்பதற்குக்கூட அச்சப்படுபவர்கள், இந்த நாட்டில் என்ன செய்துவிடுவார்கள்? அண்ணாமலை மேற்கொள்ளும் இந்த நடைபயணத்தால், அவர்களது கட்சியிலேயே எதுவும் ஏற்படாது. அது தமிழகத்திலும் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது. தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் அவர்கள். அமித்ஷாவுக்கு தமிழகத்தைப் பற்றி தெரியாது. அண்ணாமலையின் நடைபயணத்துக்கு தமிழகத்தில் யாரும் அச்சப்படமாட்டார்கள்" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in