

மேட்டூர்: காலிப் பணியிடங்களால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்களை கொண்டு செல்ல முடியாமல் மேட்டூர் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் 1994-ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 30 வார்டுகளில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இதில் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில் கடந்த மே மாதம் நகராட்சி ஆணையராக இருந்த புவனேஸ்வரன் பணியிட மாறுதலில் தருமபுரி நகராட்சிக்கு சென்றார்.
பின்னர், நகராட்சி பொறியாளர் மணிமாறன் பொறுப்பு ஆணையராக பணிபுரிந்து வந்தார். அவரும் கடந்த ஜூன் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, நகராட்சியில் பில் கலெக்டர், அக்கவுன்டன்ட், மேலாளர் உள்ளிட்ட இடங்களில் பணிபுரிந்து வந்தவர்களும் இட மாறுதலில் சென்றனர்.
ஆனால், இந்த இடத்துக்கு வேறு அலுவலர்களை நியமிக்கவில்லை. தற்போது, பில் கலெக்டர், அக்கவுன்டன்ட், மேலாளர் உள்ளிட்ட இடங்கள் காலிப் பணியிடங்களாக உள்ளன. தருமபுரி நகராட்சி ஆணையர் புவனேஸ்வரன், மேட்டூர் நகராட்சி பொறுப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நகராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படவும், அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லவும், நகராட்சி அதிகாரிகள் மட்டுமின்றி அனைத்துப் பிரிவு அலுவலர்களும் இணைந்து பணியாற்றினால் தான் நிர்வாகத்தை சிறப்பாக கொண்டு செல்ல முடியும். ஆனால், நகராட்சியில் முக்கிய பதவிக்கான அலுவலர்கள் இதுவரை நியமிக்கப்படாததால் நகராட்சி நிர்வாகம் செயல்படுவதில் பல்வேறு சிக்கல் எழுந்துள்ளது.
மேலும், ஒரு சில பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளன. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களே அனைத்துப் பணிகளையும் மேற்கொள்கின்றனர். மேலும், குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் இருப்பதால், ஆய்வுக் கூட்டம், வெளியில் உள்ள வேலை என அவர்களும் சென்று விடுவதால், அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் நகராட்சிக்கு குறைகளை தெரிவிக்க வரும் பொதுமக்கள், திரும்ப வீட்டுக்குச் செல்கின்றனர்.
மேலும், குறைகளை யாரிடம் தெரிவிப்பது எனத் தெரியாமல் தவிக்கின்றனர். மேலும், நகராட்சியில் உள்ள ஊழியர்களுக்கும் பணிப் பளு அதிகரிப்பதால் காலை முதல் இரவு வரை வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை நிலவுவதாகவும், இதனால், கடும் மன உளைச்சல், மன அழுத்தம் ஏற்படுவதாகவும் புலம்பி வருகின்றனர். எனவே, காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து நகராட்சியை சேர்ந்த ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘மேட்டூர் நகராட்சியில் பணிபுரிய யாரும் முன்வருவதில்லை. பணியிடமாறுதல் வரும் போது, அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை சில காரணங்களை கூறி இங்கு பணிபுரிய வருவதில்லை. இதனால் பல இடங்கள் காலிப் பணியிடங்களாகவே உள்ளன, என்றார்.