ரோபோ தயாரித்து மாணவர்கள் சாதனை: அண்ணா பல்கலை.யில் தொழில்நுட்ப பயிலரங்கம்
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் சனிக்கிழமை நடந்த ரோபோட்டிக் இயக்குமுறைகள் குறித்த தொழில்நுட்ப பயிலரங்கில் சிறு சிறு ரோபோக்களை மாணவர்கள் வடிவமைத்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சி.இ.ஜி. டெக் ஃபோரம் என்னும் தொழில்நுட்பக் குழு இயங்கி வருகிறது. இதன் சார்பில் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரோபோட்டிக் இயக்குமுறைகள் குறித்த ஒருநாள் பயிலரங்கு, பல்கலைக்கழகத்தின் ரோபோட்டிக் ஆய்வகத்தில் சனிக்கிழமை நடந்தது. ரோபோட்டிக் துறை வல்லுநர்கள், மூத்த மாணவர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் எடுத்தனர்.
ஒரு தானியங்கி ரோபோவை உருவாக்குவதற்குத் தேவையான மென்பொருட்கள், வன்பொருட்கள் குறித்தும், கணினி, சென்சார்களின் உதவிகளுடன் ரோபோக்களை ஆக்கபூர்வமாக இயக்குவது எப்படி என்பது குறித்தும் பயிற்றுவிக்கப்பட்டது. இதையடுத்து வல்லுநர்களின் வழிகாட்டுதலில், தடை அறியும் ரோபோ, வீடியோ கேமராவுடன் பறக்கும் சிறிய ரோபோ போன்றவற்றை 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்கள் வடிவமைத்தனர்.
இதுகுறித்து 2-ம் ஆண்டு மாணவி ஜெயந்தி கூறும்போது, ‘‘வழக்கமாக தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் கருத்தரங்குகளாகவே நடத்தப்படும். இந்த முறை பயிலரங்காக நடத்தப்பட்டதால், ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. ஒவ்வொருவரும் தனித்தனியே தொழில்நுட்பக் கருவிகளை இயக்க முடிந்தது’’ என்றார்.
நிகழ்ச்சியில் மின்னணுவியல், மின்னணு தொடர்பியல், கணினி அறிவியல் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
