Published : 06 Aug 2023 07:23 AM
Last Updated : 06 Aug 2023 07:23 AM
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் கிழக்கு கோபுரத்தில் நேற்று அதிகாலை கொடுங்கை இடிந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். கோபுரத்தை சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 7 திருச்சுற்றுகள் மற்றும் 21 கோபுரங்களுடன் அமைந்துள்ளது. இதில் கீழ சித்திரை வீதியையும், கீழ அடையவளஞ்சான் வீதியையும் இணைக்கும் சாலையில் கிழக்கு வாசல் கோபுரம் உள்ளது. 8 நிலைகளைக் கொண்ட இந்தக் கோபுரத்தில் கீழிருந்து முதல் மற்றும் இரண்டாவது நிலைகளில் கடந்த ஆண்டே லேசான விரிசல் ஏற்பட்டது. இவை உடைந்து விழாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரப்பலகைகள் மற்றும் கட்டைகளை வைத்து முட்டுக் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூலை 25-ம் தேதி இந்த கோபுரத்தின் முதல் நிலையின் மேற்புறத்தில் சிமென்ட் பூச்சுகள் உடைந்து கீழே விழுந்தன. இதைத் தொடர்ந்து மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இந்தக் கோபுரத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.67 லட்சத்துக்கு டெண்டர் கோரப்பட்டது. டெண்டரை எடுக்க யாரும் முன் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று அதிகாலை கிழக்கு கோபுரத்தில் முதல்நிலையின் முன்பகுதியில் 12 அடி நீளம் மற்றும் 2 அடி அகலம் கொண்டகொடுங்கை (சிமென்ட் கட்டுமான பகுதி) திடீரென இடிந்து விழுந்தது. இச்சம்பவம் அதிகாலை நேரத்தில் நடந்ததால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. கோயில் அதிகாரிகள் இடிபாடுகளை அப்புறப்படுத்தினர். இச்சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் இணை ஆணையர் செ.சிவராம்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: 2015-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றபோது இந்த கோபுரமும் சீரமைக்கப்பட்டது. தற்போது கிழக்கு கோபுரத்தின் முதல் நிலையில் உள்ள கொடுங்கை பகுதி இடிந்து விழுந்துள்ளது.
கோயில் நிதியிலிருந்து ரூ.98 லட்சம் செலவில் இந்தக் கோபுரம் சீரமைக்கப்படும். சிற்ப சாஸ்திர வல்லுநர்கள், தொல்லியல் துறை அதிகாரிகள், ஸ்தபதிகள் அடங்கிய குழு வழிகாட்டுதலின்படி பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, 6 மாதங்களில் முடிக்கப்படும் என்றார்.
ஆணையர் ஆய்வு: இதுகுறித்து தகவல் அறிந்ததும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, முதன்மைச் செயலாளர் கே.மணிவாசன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளிதரன், தலைமையிட தலைமை பொறியாளர் சி. இசையரசன், செயற்பொறியாளர் எஸ்.செல்வராஜ், கோயில் இணை ஆணையர் செ.சிவராம்குமார், மண்டல இணை ஆணையர் ஏ.ஆர்.பிரகாஷ் உள்ளிட்டோர் இடிந்த பகுதியை ஆய்வு செய்தனர்.
இந்து முன்னணி கண்டனம்: இதுகுறித்து, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் ‘‘ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் சிதிலமடைந்துள்ளதை சில நாட்களுக்கு முன்பே இந்து முன்னணி மற்றும் ஆன்மிக பெரியோர் சுட்டிக்காட்டினர். இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. கோபுரத்தை உடனே சீரமைக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT