

மசினகுடி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு நேற்று வந்து, ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப் படத்தில் நடித்த பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தெப்பக்காடு யானைகள் முகாமில், ரகு என்ற குட்டி யானையை பொம்மன், பெள்ளி தம்பதி வளர்த்தனர். இதனை கார்த்தகி கன்சால்வேஸ் என்ற பெண், ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்ற பெயரில் ஆவணப் படமாக எடுத்தார். இது, இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த ஆவண படத்துக்கான விருதை பெற்றது.
இந்நிலையில், பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வந்து பொம்மன், பெள்ளி தம்பதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், இருவரையும் அழைத்து பரிசுத் தொகை வழங்கினார். இந்நிலையில், இந்த தம்பதியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு வந்தார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூர் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு பிற்பகல் 3.30 மணிக்கு வந்தார். அவரை அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், மதிவேந்தன், வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ, நீலகிரி மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், கார் மூலம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்றார்.
அங்கு பொம்மன்- பெள்ளி தம்பதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர், வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு வழங்கினார். தொடர்ந்து, அங்குள்ள பழங்குடியின மக்கள், பாகன்களுடன் உரையாடினார்.
பின்னர் மாலை 5 மணிக்கு முகாமில் இருந்து மசினகுடிக்கு புறப்பட்டார். அப்போது அவரை பார்க்க சாலையோரம் ஏராளமான மக்கள் காத்திருந்தனர். அவர்களை பார்த்ததும் வாகனத்தை குடியரசுத் தலைவர் நிறுத்தி வெளியே வந்தார். மக்களை பார்த்து கையசைத்து, வணக்கம் தெரிவித்தார். அங்கு கூடியிருந்த குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு, தான் கொண்டு வந்த சாக்லேட்களை வழங்கி மகிழ்ந்தார்.
மசினகுடியை சேர்ந்த அனன்யா என்ற 11 வயது சிறுமி, தான் எழுதிய ‘தி பேர்ட்ஸ் ஆஃப் மசினகுடி’ என்ற புத்தகத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்கினார். நேற்று மாலை 5.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மைசூர் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.
ஆளுநர், முதல்வர் வரவேற்பு: சென்னை விமான நிலையத்தில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். முதல்வர் ஸ்டாலின், ஒரிய மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை குடியரசுத் தலைவருக்கு பரிசளித்தார். பின்னர் முர்மு நேற்று இரவு ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்தார்.
இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறும், சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார். ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்துக்கு பாரதியார் மண்டபம் எனப் பெயர் சூட்டும் விழாவிலும் பங்கேற்கிறார்.
7-ம் தேதி புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 8-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில், நகர கண்காட்சியான மணிமந்திரைப் பார்வையிட்டு விட்டு சென்னை வழியாக டெல்லி புறப்பட்டு செல்கிறார்.