

கூடலூர் / குன்னூர்: அரசு நிர்ணயித்த கூலியை ஒப்பந்ததாரர்கள் வழங்க மறுப்பதாக கூறி, கூடலூர் நகராட்சியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடலூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு நிா்ணயித்த ஊதியத்தை ஒப்பந்ததாரர் வழங்குவதில்லை என குற்றம்சாட்டியும், இதர பயன்களை வழங்க வேண்டுமென வலியுறுத்தியும், தொடர்ந்து 5-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், அரசு நிர்ணயித்த ஊதியத்தை ஒப்பந்ததாரர் முழுமையாக வழங்க முன்வராததால் உடன்பாடு ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் அனைவரும் கலைந்து சென்ற நிலையில், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.
குன்னூர் அருகே ஜெகதளா பேரூராட்சியில் 30-க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதிக்கு வந்தசுற்றுலா துறை துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், தூய்மை பணியாளர்களை சந்தித்து குறைகளை கேட்டார். அப்போது, சம்பளத்தை உயர்த்தி தருமாறு தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்காக, வார்டு உறுப்பினர் ஒருவர் தூய்மை பணியாளர்களை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், நேற்று பணிக்கு செல்லாமல் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தூய்மை பணியாளர்களை தரக்குறைவாக பேசிய திமுக வார்டு உறுப்பினர் யசோதாவை கண்டித்தும், சம்பளத்தை உயர்த்தி வழங்கவும் கோரிக்கை விடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம், இப்பிரச்சினை குறித்து புகார் மனுவாக எழுதி தருமாறு தூய்மைப் பணியாளர்களிடம் கூறினார். வார்டு உறுப்பினர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.