Published : 06 Aug 2023 04:07 AM
Last Updated : 06 Aug 2023 04:07 AM

பழங்குடியினருக்கு அரசியலமைப்பு உரிமைகளை வழங்குவது முக்கியம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கருத்து

முதுமலை: பழங்குடியினருக்கு இந்திய அரசியல் அமைப்பின் உரிமைகளை வழங்குவது மிகவும் முக்கியமானது என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அங்கு யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்கள் 38 பேரிடம் கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசியதாவது: ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடுகள் அதன் யானை பராமரிப்பு மேலாண்மைக்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளது பெருமைக்குரியது.

நமது தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதன் ஒரு பகுதியாக, யானைகளை பாதுகாப்பது நமது தேசிய பொறுப்பு. ஆசிய யானைகள் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் வகையில் தெப்பக்காடு யானைகள் முகாமில் அதி நவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகத்தை அரசு அமைத்து வருகிறது.

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் பழங்குடியின சமூகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. எனவே, அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை உறுதி செய்வதும், அடிப்படை வசதிகளை அவர்களுக்கு வழங்குவதும் மிகவும் முக்கியம். தெப்பக்காடு யானைகள் முகாமை நிர்வகிப்பதில் பெட்ட குரும்பர், காட்டுநாயக்கர் மற்றும் மலசர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய அறிவும் அனுபவமும் பயன்படுத்தப்படுகிறது.

பழங்குடியினருக்கு தேவையான வீடுகள், சாலை, மின் வசதிகள் செய்து தரப்படும். வனத்தை சிறப்பாக பராமரியுங்கள். அதே போல உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வையுங்கள். அது உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். இவ்வாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசினார்.

பின்னர், 40 ஆண்டுகளாக பாகன்களாக பணியாற்றி வரும் தேவராஜ், கிருமாறன் ஆகியோரிடம், யானைகளை எப்படி பராமரிப்பது, காட்டு யானைகளை கும்கி யானைகள் உதவியுடன் விரட்டுவது எப்படி, என்னென்ன சிரமங்கள் இருந்தன ஆகிய விஷயங்களை ஆர்வமுடன் கேட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x