

ஓசூர்: ஓசூர் பகுதியில் ஆடிப்பட்டத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு தென்மேற்கு பருவமழை கை கொடுக்காத நிலையில், விளை நிலங்களில் விதைக்கப்பட்ட விதைகள் பறவைகளுக்கு உணவாகி வருகிறது.
ஓசூர், தேன்கனிக்கோட்டை, நாட்றாம்பாளையம், அஞ்செட்டி, தக்கட்டி, கொடகரை உள்ளிட்ட பகுதிகளில் வானம் பார்த்த பூமியாக உள்ள மானாவாரி நிலங்களில் ஆண்டுதோறும் ஆடிப்பட்டத்தில் கேழ்வரகு, எள்ளு, வேர்க்கடலை, ஆமணக்கு உள்ளிட்ட சிறுதானிய மற்றும் எண்ணெய் வித்து பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
நடப்பாண்டில், ஆடிப்பட்டத்துக்காக மானாவாரி நிலங்களில் உழவுப் பணிகளை மேற்கொண்டு தென்மேற்கு பருவ மழைக்காகக் காத்திருந்த நிலையில், வழக்கத்தை விட சற்று பின் தங்கி பெய்த மழையைத் தொடர்ந்து சில விவசாயிகள் வழக்கம்போல எண்ணெய் வித்து மற்றும் சிறு தானியங்களை வயல்களில் விதைத்தனர்.
ஆனால், எதிர்பார்த்த அளவில் தொடர்ந்து பருவ மழை கை கொடுக்காத நிலையில், மானாவாரியில் விதைக்கப்பட்ட விதைகள் முளைக்காமல், பறவைகளுக்கு உணவாகி வருகிறது. மேலும், விதைப்புப் பணி மேற்கொள்ளாத வயல்கள் உழவுப் பணி மேற்கொண்ட நிலையில் ஈரமின்றி வறண்டு காணப்படுகிறது.
இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: ஓசூர் சுற்று வட்டாரப் பகுதியில் தென்மேற்கு பருவமழை நம்பி பல ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. ஆடி மாதத்துக்கு முன்னர் வயல்களில் விதைப்பு பணியில் ஈடுபடுவோம். ஆடி பிறந்ததும் பருவமழை பெய்து, பயிர்கள் துளிர் விடும். ஆனால், நிகழாண்டில் இதுவரை பருவமழை கைகொடுக்காத நிலையில் பல ஏக்கர் விளை நிலங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளது.
ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் அந்தந்த பகுதியில் பெய்த மழையைத் தொடர்ந்து விதைப்புப் பணியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் பருவ மழை இல்லாததால், வயல்களில் பயிர்கள் துளிர்விடாததால், விதைகள் பறவைகளுக்கு உணவாகி வருகிறது. வரும் நாட்களில் மழை பெய்தாலும் அது ஆடிப்பட்டத்துக்கு கை கொடுக்காது. மேலும், பயிர்களில் நோய் தாக்கம் ஏற்பட்டு மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.